முதல்-மந்திரி சித்தராமையாவிடம் மன்னிப்பு கேட்பேன் புதிய மேயர் பாக்கியவதி பேட்டி

நான் காங்கிரசில் இருந்து விலகவில்லை எனவும், முதல்-மந்திரியிடம் மன்னிப்பு கேட்பேன் என்றும் புதிய மேயர் பாக்கியவதி கூறியுள்ளார்.

Update: 2018-01-25 00:44 GMT
மைசூரு,

மைசூரு மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தல் நேற்று நடந்தது. இதில் காங்கிரசில் இருந்து விலகி, ஜனதாதளம் (எஸ்)-பா.ஜனதா கூட்டணிக்கு மாறிய கவுன்சிலர் பாக்கியவதி மேயராக தேர்வு செய்யப்பட்டார். அவர் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் புதிய மேயராக பாக்கியவதி பொறுப்பு ஏற்றார். அவருக்கு பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கவுன்சிலர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர். பின்னர் பாக்கியவதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் போவி சமுதாயத்தை சேர்ந்தவர். மைசூரு மாநகராட்சியில் முதல் முறையாக போவி சமுதாயத்தை சேர்ந்த நான் மேயராக தேர்வாகி உள்ளேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது சமுதாயம் மட்டுமின்றி அனைத்து சமுதாய மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன். மேயர் தேர்தலில் சில குழப்பங்கள் நடந்துவிட்டன. இருப்பினும் நான் இன்னும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகவில்லை. எப்போதும் காங்கிரசில் இருந்து வெளியேற மாட்டேன். இந்த பதவி எனக்கு முதல்-மந்திரி சித்தராமையா கொடுத்ததாக தான் கருதி ஏற்றுள்ளேன். நடந்த சம்பவங்களுக்கு நான் முதல்-மந்திரி சித்தராமையாவை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்பேன்.

மைசூரு நகர வளர்ச்சிக்கும், நகர மக்களின் மேம்பாட்டுக்கான திட்டங்களை காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகளுடன் இணைந்து மேற்கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்