பெங்களூருவில் நாளை குடியரசு தின விழா கவர்னர் வஜூபாய் வாலா தேசிய கொடி ஏற்றுகிறார்

பெங்களூருவில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் கவர்னர் வஜூபாய் வாலா தேசிய கொடி ஏற்றுகிறார்.;

Update:2018-01-25 05:43 IST
பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூரு மாநகராட்சி சார்பில் குடியரசு தின விழா பெங்களூரு பீல்டு மார்ஷல் மானேக்‌ஷா மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது. இதில் கவர்னர் வஜூபாய் வாலா கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். அதைத்தொடர்ந்து அவர் போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டு, குடியரசு தின உரையாற்றுகிறார்.

அதன் பிறகு போலீசார் உள்பட 30 குழுக்களின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்கிறார். பார்வையாளர்களின் வசதிக்காக 11 ஆயிரத்து 500 இருக்கைகள் போடப்படுகிறது. பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தேசிய கொடி ஏற்றும்போது இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் வானில் பறந்தபடி பூக்களை தூவவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அணிவகுப்பில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு சிற்றுண்டி மற்றும் குடிநீர் வழங்கப்படும். பாதுகாப்பை கருத்தில் கொண்டு விழா நடைபெறும் மைதானத்தை சுற்றிலும் 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அவசர தேவைக்காக தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்படும்.

ஏதாவது அசம்பாவித சம்பவம் ஏற்பட்டால் அதை சமாளிக்க மருத்துவமனைகளில் தேவையான அளவுக்கு காலி படுக்கைகள் இருக்கும்படியும் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மஞ்சுநாத் பிரசாத் கூறினார்.

குடியரசு தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நகர போலீஸ் கமிஷனர் சுனில்குமார் கூறியதாவது:-

குடியரசு தின விழாவுக்கான பாதுகாப்பு பணியில் 9 துணை போலீஸ் கமிஷனர்கள், 16 உதவி கமிஷனர்கள், 51 இன்ஸ்பெக்டர்கள், 92 சப்-இன்ஸ்பெக்டர்கள், 16 மகளிர் சப்-இன்ஸ்பெக்டர்கள், 535 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 126 அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். நகரில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் சந்தேகத்திற்கிடமான வகையில் தங்கி இருக்கும் நபர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.

அணிவகுப்பில் கோவா மாநில போலீஸ் ஆயுதப்படை ஒன்றும் பங்கேற்கிறது. விழா நடைபெறும் பீல்டு மார்ஷல் மானேக்‌ஷா மைதானம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. விழா நடைபெறும் தினத்தன்று உணவு பொருட்கள், புகையிலை பொருட்கள், வெடிபொருட்கள், குடிநீர் பாட்டில்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.

இவ்வாறு சுனில்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்