பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி கரூரில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-01-24 22:45 GMT
கரூர்,

தமிழகத்தில் கடந்த 20-ந்தேதி முதல் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. பஸ் கட்டண உயர்வுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அரசியல் கட்சியினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும் கரூரில் பஸ் நிலையம் அருகே ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு பா.ஜ.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பொன் பாலசுப்பிரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோரிக்கை குறித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை தொடர்பாக கோஷங்களை எழுப்பினர். இதில் பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி

இதேபோல் கோரிக்கையை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். மண்டல அமைப்பு செயலாளர் கிட்டு கோரிக்கை தொடர்பாக பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் நன்மாறன் தலைமை தாங்கினார்.

கல்லூரி மாணவர்கள்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து கரூர் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று மாலை போராட்டம் நடத்த கல்லூரி நுழைவு வாயில் முன்பு திரண்டனர். மாணவர்களை பேராசிரியர்கள் கலைந்து செல்ல அறிவுறுத்தினர். மேலும் கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்கவில்லை. கல்லூரி முன்பு பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். 

மேலும் செய்திகள்