பஸ் கட்டண உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாட்டுவண்டிகளில் ஊர்வலமாக செல்ல முயற்சி

பஸ் கட்டண உயர்வை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாட்டுவண்டிகளில் ஊர்வலமாக செல்ல முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-01-24 22:45 GMT
ஆலங்குடி,

பஸ் கட்டண உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாட்டுவண்டிகளில் ஆலங்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு ஊர்வலமாக செல்லபோவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி நேற்று ஆலங்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கூடினர். பின்னர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சொர்ண குமார், மாவட்ட செயலாளர் செங்கோடன், விவசாய சங்க செயலாளர் மாதவன் உள்பட 25 பேர் 2 மாட்டு வண்டிகளில் ஏறி ஊர்வலமாக புதுக்கோட்டைக்கு புறப்பட்டனர்.

போலீசார் தடுத்து நிறுத்தினர்

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாட்டுவண்டிகளில் இருந்தபடி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பளம், சேமநல நிதி என கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்த, தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை காரணம் காட்டி, பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என கூறினர். மேலும் அடுத்த கட்டமாக கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுடன், அரசு பஸ்சில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்யும் போராட்டம் நடத்தப்போவதாக கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கீரனூர்

இதேபோல கீரனூர் காந்தி சிலை முன்பு குன்றாண்டார்கோவில் ஒன்றிய, நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பஸ்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை, டேவிட் மற்றும் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்