குடியரசு தினத்தையொட்டி விமான நிலையத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு

குடியரசு தினத்தையொட்டி திருச்சி விமான நிலையத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. திருச்சி நகரில் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Update: 2018-01-24 22:45 GMT
திருச்சி,

நாடு முழுவதும் நாளை (வெள்ளிக்கிழமை) குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் அனைத்து மாநில தலைநகரங்களிலும் மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாளை குடியரசு தினவிழாவையொட்டி தேசிய கொடி ஏற்றப்படும்.

குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் தீவிரவாதிகளால் ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடாமல் தடுப்பதற்காக தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து போலீசார் நாடு முழுவதும் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.

ஐந்தடுக்கு பாதுகாப்பு

குடியரசு தினத்தையொட்டி திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு, பகல் என 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளும், வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவிகள், மோப்ப நாய் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இதேபோல் அவர்கள் கொண்டு வரும் உடைமைகளும் ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப் படுகிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலையத்தின் பார்வையாளர் கூடம் கடந்த 18-ந் தேதி முதல் மூடப்பட்டு விட்டது. தற்போது விமான நிலைய வளாகத்தில் வாடகை கார் நிறுத்தும் பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர். குடியரசு தினத்தையொட்டி திருச்சி விமான நிலையத்திற்கு ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தவிர தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார், ஆயுதப்படை போலீசார், திருச்சி மாநகர போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

500 போலீசார்

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம், மத்திய பஸ் நிலையம், காந்திமார்க்கெட், மலைக்கோட்டை கோவில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உள்பட முக்கிய இடங்கள் மற்றும் மக்கள் அதிக அளவில் கூடும் வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள் போன்ற இடங்களிலும் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணிகளை செய்து வருகிறார்கள். திருச்சி மாநகர் முழுவதும் சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


மேலும் செய்திகள்