பஸ் கட்டண உயர்வை கண்டித்து மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து மாணவ-மாணவிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-24 23:00 GMT
குடவாசல்,

தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு பஸ் கட்டணத்தை உயர்த்தியது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து நன்னிலம் பாரதிதாசன் உறுப்பு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாணவ-மாணவிகள் ஊர்வலமாக சென்று நன்னிலம் தாசில்தாரிடம் பஸ் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.

அரசு ஊழியர்கள்

அதேபோல குடவாசல் தாசில்தார் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்ட தலைவர் சுந்தரலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜமாணிக்கம், பிரகாஷ் ஆகியோர் பேசினர். தமிழக அரசு உயர்த்தி உள்ள பஸ் கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

திருவாரூர்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து திருவாரூர் பஸ் நிலையம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் வடிவழகன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார். நாகை பாராளுமன்ற செயலாளர் இடிமுரசு, மாநில செயற்குழு உறுப்பினர் திருமாறன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

பஸ் கட்டண உயர்வால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட பொருளாளர் வெற்றி, மாவட்ட செய்தி தொடர்பாளர் தமிழ்செல்வன், நிர்வாகிகள் நிலவன், பாப்பையன், முருகையன், பாக்கியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் ஆசைதம்பி நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்