மராட்டியத்தில் 2 நாட்களுக்கு கடும் குளிர் நிலவும்

மராட்டியத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கடும் குளிர் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Update: 2018-01-24 22:30 GMT
மும்பை,

குளிர்காலமான இப்போது மராட்டியத்தில் அதிக பனிப்பொழிவு நிலவி வருகிறது. பகலில் வெயில் அடித்த போதிலும் குளிரின் தாக்கத்தை உணர முடிந்தது.

மும்பையில் நேற்று அதிகப்பட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியசில் இருந்து 28 டிகிரியாக குறைந்தது. இதனால் இரவு நேரத்தில் மேலும் குளிர் நிலவியது. குறிப்பாக நாசிக் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிரின் தாக்கம் உச்சக்கட்டத்தை எட்டியது.

நாசிக் சிவார் பகுதியில் நேற்று 8.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மட்டுமே பதிவாகியது. இதனால் பொதுமக்களை குளிர் வாட்டி எடுத்தது.

நாசிக் மாவட்டத்தில் குளிரில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள, பொதுமக்கள் இரவுநேரங்களில் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்த்து வருகின்றனர். மேலும் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர்காய்வதையும் பார்க்க முடிகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் பனிமூட்டம் நிலவுவதால், வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி செல்கின்றன.

இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், வடக்கில் இருந்து குளிர்ந்த காற்று வீசுவதால் மராட்டியம் முழுவதும் மேலும் இரண்டு நாட்கள் கடும் குளிர் நிலவும் என தெரிவித்துள்ளது.

மேலும் இது எப்போதும் குளிர்காலங்களில் நிலவும் சாதாரண வெப்பநிலை தான் என்றும், இந்த குளிரின் மூலம் கோதுமை, ராகி போன்ற பயிர்கள் பயனடையும் என்றும் கூறினர். 

மேலும் செய்திகள்