யானைகளால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை கலெக்டர் பேச்சு

யானைகளால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க வனத்துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் ராமன் பேசினார்.

Update: 2018-01-24 22:45 GMT
குடியாத்தம்,

குடியாத்தத்தை அடுத்த சேம்பள்ளி ஊராட்சி ஜிட்டப்பல்லி கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் எம்.கஜேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பேபிஇந்திரா, ஆய்வுக்குழு அலுவலர் சுமதி, வேளாண்மை இணை இயக்குனர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் தாசில்தார் சுமதி வரவேற்றார்.

முகாமில் கலெக்டர் ராமன் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 140 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா, பிறப்பு, இறப்பு சான்றிதழ், முதியோர் உதவித் தொகை, சலவை எந்திரம், தையல் எந்திரங்கள், வேளாண்மை எந்திரங்கள் ஆகியவற்றை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நடவடிக்கை

தமிழக அரசு அறிவித்துள்ள அம்மா இருசக்கர வாகன திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதற்கான விண்ணப்பங்கள் 22-ந் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதனை பூர்த்தி செய்து 5-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தகுதியுள்ள பெண்கள் இருசக்கர வாகனத்திற்கான 50 சதவீத மானிய தொகையும், மீதி தொகைக்கு கடன் வசதியும் செய்து தரப்படும்.

யானைகளால் விவசாயிகள் பாதிப்பை தடுக்க வனத்துறையினருடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உப்பரபல்லியில் துணை மின்நிலையம் பணிகள் விரைவு படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் முன்னாள் வேளாண்மை குழு உறுப்பினர் சம்பத்நாயுடு, தாசில்தார் மகாலிங்கம், உதவி வேளாண்மை இயக்குனர்கள் விஸ்வநாதன், பர்வதம்மா, வட்ட வழங்கல் அலுவலர் கலைவாணி, கிராம நிர்வாக அலுவலர்கள் சசிகுமார், தரணி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மக்கள் தொடர்பு அலுவலர் இளங்கோ நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்