பஸ் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

பஸ் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.;

Update: 2018-01-24 22:15 GMT
புதுச்சேரி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை பிரதேச செயலாளர் ராஜாங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

புதுவை காங்கிரஸ் அரசு மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மக்கள் தலையில் தொடர்ச்சியாக வரிச்சுமைகளை ஏற்றி வருகிறது. புதுவை அரசு போக்குவரத்து கழக பஸ் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சாதாரண, ஏழை, எளிய மக்கள் குறைந்த ஊதியத்துக்கு பக்கத்து மாநிலங்களில் வேலை செய்யக்கூடிய பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற கடமையில் இருந்து மாறி லாப நட்ட கணக்கு பார்க்கும் நோக்கத்தோடு புதுவை அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இந்த கட்டண உயர்வினை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அரசின் இந்த மோசமான நடவடிக்கையை எதிர்பார்த்துக்கொண்டிருந்த தனியார் பஸ் முதலாளிகளும் உள்ளூர் கட்டணத்தை தான்தோன்றித்தனமாக உயர்த்தி உள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டபோது எழுந்த எதிர்ப்பினை தொடர்ந்து, கட்டண உயர்வை நிறுத்தி வைப்பதாகவும், கட்டணத்தை நிர்ணயிக்க மக்கள் பிரதிநிதிகளை கொண்ட குழு அமைத்து கட்டணம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் முதல்–அமைச்சர் அறிவித்தார். ஆனால் தற்போது புதுவை அரசு மிக மோசமான முறையில் மக்களை பாதிக்கக்கூடிய வகையில் கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தி உள்ளது. இந்த கட்டண உயர்வினை திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு ராஜாங்கம் கூறியுள்ளார்.

இந்திய மாணவர் சங்க தலைவர் ஆனந்த், செயலாளர் பாபு ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

புதுவை அரசு நகர்ப்புற பஸ்களின் கட்டணத்தை உயர்த்தாதபோது புதுவையில் இயங்கும் தனியார் பஸ்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கட்டணங்களை உயர்த்தியுள்ளன. இதனால் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

புதுவை காங்கிரஸ் அரசு உடனடியாக தனியார் பஸ்களின் அடாவடித்தனமான கூடுதல் கட்டண வசூலை திரும்பப்பெறாவிட்டால் புதுவை முழுவதும் அனைத்து இடங்களிலும் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்