திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்குள் விவசாயிகள் தர்ணா

தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களை போலீசார் மிரட்டுவதை கண்டித்து, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்குள் தரையில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-24 22:30 GMT
திருப்பூர்,

‘கள்’ இறக்கி விற்பனை செய்ய அரசு அனுமதி தர வேண்டும் என்று கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தென்னை மரங்களில் ‘கள்’ இறக்கி வருகிறார்கள். இந்த நிலையில் பொங்கலூர் சுற்றுப்பகுதியில் கடந்த 22-ந் தேதி தென்னை மரங்களில் கட்டியிருந்த ‘கள்’ இறக்கும் பானைகளை உடைத்ததுடன், தென்னை மரங்களையும் காமநாயக்கன்பாளையம் போலீசார் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் விவசாயிகளையும் போலீசார் மிரட்டியதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து அன்று மதியம் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் திருப்பூர் சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் முதலில் உடன்பாடு ஏற்படாததால், அலுவலகத்தின் முன் அரை நிர்வாணமாக விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். அதன்பிறகு சமாதானம் அடைந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை நாதம்பாளையத்தில் உள்ள பழனிசாமி என்பவரின் தோட்டத்தில் தென்னை மரம் ஏறும் தொழிலாளியான ராசு(வயது 50) என்பவரை காமநாயக்கன்பாளையம் போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றதாக கூறப்படுகிறது. மேலும் தோட்டத்தில் உள்ள தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களையும் போலீசார் மிரட்டுவதாக கூறி, போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பொன்னுசாமி தலைமையில் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு மதியம் வந்தனர். விவசாயிகள் தங்கள் கைகளில் ‘நீரா’ பானத்தை பாட்டிலில் எடுத்து வந்தனர்.

கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு பணிக்காக வெளியூர் சென்றதால், விவசாயிகள் அனைவரும் கலெக்டர் அலுவலகத்தின் வரவேற்பு அறை வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். கலெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். மாலை 3.30 மணி வரை விவசாயிகள் தரையில் அமர்ந்து இருந்தார்கள். சிலர் அங்கேயே படுத்து தூங்கினார்கள்.

இதைத்தொடர்ந்து கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சாதனைக்குறள் வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விவசாயிகள், சிறு விவசாயிகளுக்கு ‘கள்’ இறக்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும். போலீசார் வழக்குப்பதிவு செய்யட்டும். ஆனால் தென்ன மரத்தை சேதப்படுத்த வேண்டாம். விவசாயிகளை தரக்குறைவாக திட்டுவதை தவிர்ப்பதுடன் சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கையில் போலீசார் ஈடுபடக்கூடாது. ஒரு தோட்டத்தில் 15 மரத்தில் ‘கள்’ இறக்க அனுமதிக்க வேண்டும். ‘கள்’ இறக்கும் தொழிலாளர்கள் மீது சட்டத்துக்கு புறம்பாக நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், நாளை(இன்று) கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் வந்து கலெக்டரிடம் முறையிடுங்கள் என்றும் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சாதனைக்குறள் தெரிவித்தார்.

பின்னர் மாலை 4 மணி அளவில் அனைத்து விவசாயிகளும் தர்ணா போராட்டத்தை கைவிட்டு பல்லடத்துக்கு புறப்பட்டு சென்றனர். பல்லடத்துக்கு சென்று துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ‘கள்’ பானைகளை உடைப்பது, தென்னை மரங்களை சேதப்படுத்துவது போன்ற நடவடிக்கையில் போலீசார் ஈடுபடக்கூடாது என்று விவசாயிகள் வலியுறுத்தினார்கள். ஆனால் காவல்துறை தரப்பில் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து இன்று(வியாழக்கிழமை) கலெக்டரிடம் முறையிட்டு தீர்வு காணலாம் என்று கூறி விவசாயிகள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்