பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் வலுக்கிறது: பொதுமக்கள்-மாணவர்கள் சாலை மறியல்

பெரம்பலூரில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Update: 2018-01-24 23:00 GMT
பெரம்பலூர்,

தமிழகத்தில், பஸ் கட்டண உயர்வு அதிகப்படியானதாக இருப்பதால் பொதுமக்களின் நலன் கருதி அதனை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு இடங்களில் பொதுமக்கள், மாணவர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் சார்பில், போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நேற்று காலை பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமம் கடைக்கால் பஸ் நிறுத்த பகுதியில் மூன்று ரோடுகள் சந்திக்கும் இடத்தில் அமர்ந்து பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் பஸ் கட்டண உயர்வை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, பஸ் கட்டண உயர்வால் ஏழை மக்கள் மற்றும் மாணவர்களின் பாதிப்பு குறித்து விளக்கி கூறினர்.

மேலும் அந்தபகுதியில் வாகனங்கள் செல்லமுடியாதபடி கருங்கற்களை சாலையில் அடுக்கி வைத்தனர். இதனால் பள்ளி, கல்லூரி வாகனங்கள், அரசு பஸ், லாரி, மினி பஸ் உள்ளிட்டவை போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரம்பலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் மற்றும் போலீசார் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், எம்.எல்.ஏ.வை வர சொல்லுங்கள் அவரிடம் எங்களது பாதிப்பை எடுத்து கூறிவிட்டு செல்கிறோம்.

நிர்வாக திறமையின்மையின் காரணமாக போக்குவரத்துக்கழகம் நஷ்டத்தில் சென்றதை ஈடுசெய்ய பஸ் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களை ஏன் வஞ்சிக்கிறீர்கள்? அரசின் வருவாயை பெருக்க பல வழிகள் இருக்கையில் கட்டண உயர்வை தேர்வு செய்யதது எதற்கு? என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர். மேலும் போக்குவரத்துகழகத்தை கொண்டு மக்களிடம் கலகம் செய்யாதே... என்பன உள்ளிட்ட கோஷங்களை அரசுக்கு எதிராக அவர்கள் எழுப்பினர்.

மறியல் போராட்டத்தால் பலர் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர் எனக்கூறி போலீசார் போராட்டக்காரர்களிடம் சமாதானம் பேசினர். அப்போது ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றி எப்படி சாத்தியமாயிற்றோ... அதுபோல் பஸ்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரும் போராட்டத்திலும் மக்கள் பிரச்சினையை எடுத்துக்கூறி வெற்றி பெறுவோம் என மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் உள்ளிட்டோர் கோஷம் எழுப்பி ஆர்ப்பரித்தனர். நிலைமை கட்டு கடங்காமல் சென்றதும் ஆயுதப்படை போலீசார் வரவழைத்து மறியலை கலைக்க முயற்சி செய்தனர்.

அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றமான சூழல் உருவானது.

இதற்கிடையே பெரம்பலூர் தாசில்தார் பாலகிருஷ்ணன் உள்பட வருவாய்துறை அதிகாரிகள் வந்து போராட்டத்தை கலைக்கமுடியாததால், அணிவகுத்து நின்ற வாகனங்களை மாற்றுப் பாதையில் செல்லுமாறு கூறி திருப்பி விட்டனர். இதற்கிடையே அந்த வழியாக வந்த 108 ஆம்புலன்சுக்கு போராட்டக்காரர்கள் வழிவிட்டு ஒதுங்கினர். அப்போது அதில் நோயாளி யாரும் இல்லை... என்பதை அறிந்த சிலர் ஆம்புலன்சை முற்றுகையிட்டனர்.

இதைக்கண்ட போலீசார் ஓடி வந்து அந்த நபர்களை பிடித்து இழுத்து, ஆம்புலன்சு அவசர தேவைக்காக செல்கிறது, அதனை தடுக்காதீர்கள் என கூறி எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து அந்த ஆம்புலன்சு அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் போலீசார்-அதிகாரிகளின் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் எசனை பஸ்நிறுத்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இதற்கிடையே எசனை மாரியம்மன் கோவில் பகுதியிலுள்ள சாலையிலும் பொதுமக்கள் கற்களை அடுக்கி வைத்து மறியல் போராட்டம் நடத்தினர். அங்கும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைய செய்தனர். அங்கு சாலையில் கிடந்த கற்களையும் போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் அங்கும் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கடைவீதியில் பஸ் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர்.

ஆலத்தூர் தாசில்தார் சீனிவாசன் உள்பட அதிகாரிகள் மற்றும் பாடாலூர் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனால் காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை 2 மணிநேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதே போல் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து, பஸ் கட்டண உயர்வை திரும்பபெறக்கோரி கல்லூரி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எம்.எல்.ஏ.க்களுக்கு ஏன் சம்பள உயர்வு? என கேள்வி எழுப்பினர். மேலும் பெரம்பலூர்-ஆத்தூர் சாலை வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் வேப்பந்தட்டை அரசு கலைக்கல்லூரி முன்பு நின்று செல்ல வேண்டும், ஏழை மாணவர்களின் நலன் கருதி பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த அரும்பாவூர் போலீசார், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மதியம் கலைந்து சென்றனர். மாணவர்களின் போராட்டம் எதிரொலியாக அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு கல்லூரிக்கு நேற்றும், இன்றும் (வியாழக்கிழமை) விடுமுறை அறிவித்து முதல்வர் ஜெயசந்திரன் உத்தரவிட்டார்.

மேலும் பெரம்பலூர் அருகே கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டதால் செட்டிகுளம்-பெரம்பலூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்