பஸ் கட்டண உயர்வை கண்டித்து கோபியில் 2-வது நாளாக கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம்

கோபியில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து கல்லூரி மாணவ-மாணவிகள் 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

Update: 2018-01-24 22:15 GMT
கடத்தூர்,

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வுக்கு பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கட்டண உயர்வை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் காலை கோபி கலை அறிவியல கல்லூரி மாணவ-மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் கல்லூரி செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக ஈரோடு மாவட்டம் கோபி கலை அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் பகல் 11 மணி அளவில் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு கரட்டடிபாளையம் கல்லூரி செல்லும் சாலையில் ஒன்று கூடினார்கள். பின்னர் பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், அதை திரும்பப்பெற கோரியும் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம், தாசில்தார் பூபதி, இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் அங்கு சென்று மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது அதிகாரிகள் கூறும்போது, ‘பஸ் கட்டணத்தை உயர்த்தினாலும் மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவது தொடர்ந்து நீடிக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. எனவே சாலை மறியலை கைவிட்டு கலைந்து செல்லுங்கள்’ என்றனர்.

அதை ஏற்றுக்கொண்ட கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு மதியம் 1 மணி அளவில் கல்லூரிக்கு திரும்பினார்கள்.

கல்லூரி மாணவ-மாணவிகளின் 2-வது நாள் சாலை மறியலால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் சத்தியமங்கலம்-அத்தாணி ரோட்டில் தனியார் கலை அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் 100 பேர் கல்லூரி முன்பு ஒன்று கூடி பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசார் கூறும்போது, ‘உங்கள் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்து கூறுகிறோம்.’ என்றனர்.

அதை ஏற்றுக்கொண்ட மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு திரும்பி சென்றனர். 

மேலும் செய்திகள்