பழனி பெரியாவுடையார் கோவிலுக்குள் மாற்றுத்திறனாளி தம்பியுடன் அக்காள்-தங்கை தற்கொலை

கடன் தொல்லை காரணமாக, பழனி பெரியாவுடையார் கோவிலுக்குள் மாற்றுத்திறனாளி தம்பியுடன் அக்காள்-தங்கை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2018-01-24 23:00 GMT
பழனி,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் அருள்ஜோதி வீதியை சேர்ந்தவர் கந்தசாமி. அவருடைய மகன்கள் பாலு (வயது 54), வேலுச்சாமி (32). மகள்கள் சீதாலட்சுமி (56), தனலட்சுமி (52), ஜெயலட்சுமி (48), சந்திரா (36). இதில், வேலுச்சாமி மாற்றுத்திறனாளி ஆவார். இவர், பழனி-பாலசமுத்திரம் ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

பழனி முருகன் கோவிலில், ஸ்டோர் கீப்பராக பாலு பணிபுரிகிறார். சீதாலட்சுமி திருமணமாகி கணவருடன் திருப்பூரில் வசிக்கிறார். தனலட்சுமி கணவருடன் பழனியில் குடியிருக்கிறார். ஜெயலட்சுமிக்கு, தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த குமார் என்பவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த ஜெயலட்சுமி, தந்தை வீட்டில் வசித்து வந்தார். சந்திராவுக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இந்த நிலையில் கந்தசாமி குடும்பத்தினர் அதே பகுதியில் வீடு கட்டி வருகின்றனர். இதற்காக சிலரிடம் அவர்கள் கடன் வாங்கி இருந்தனர். ஆனால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவர்கள் தவித்து வந்தனர். கடன் கொடுத்தவர்கள், ஜெயலட்சுமி, சந்திரா, வேலுச்சாமி ஆகியோரிடம் பணத்தை கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் மனம் உடைந்து காணப்பட்டனர். வீட்டு வேலையும் பாதியிலேயே நின்று விட்டது. கடன் தொகையையும் திருப்பி செலுத்த முடியவில்லை, வீட்டு வேலையும் நிறைவு பெறவில்லை என்பதால் அவர்கள் விரக்தி அடைந்தனர். இதன்காரணமாக 3 பேரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று மதிய வேளையில் பழனி பெரியாவுடையார் கோவிலுக்கு அவர்கள் சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் கோவில் வெளிப்பிரகாரத்தில் அமர்ந்து, தாங்கள் வாங்கி வந்த விஷத்தை குடித்தனர். சிறிதுநேரத்தில் 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

மதியநேரம் என்பதால் கோவிலில் பக்தர்கள் யாரும் இல்லை. பின்னர் மாலையில் கோவிலுக்கு பக்தர்கள் வரத்தொடங்கினர். அப்போது கோவில் பிரகாரத்தில் 3 பேரும் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், கடன் தொல்லையால் அவர்கள் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

கந்தசாமி குடும்பத்தினர், பழனி பெரியாவுடையார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். தங்களது கடன் பிரச்சினை தீரக்கோரி கோவிலில் அவர்கள் வேண்டுதல் செய்திருந்தனர். இருப்பினும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காததால், கோவில் வளாகத்திலேயே அவர்கள் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்திருக்கலாம் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

கோவில் பிரகாரத்தில், அக்காள்-தங்கை உள்பட 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் எதிரொலியாக கோவில் நடை அடைக்கப்பட்டது. உடனடியாக கோவில் குருக்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பரிகார பூஜைகளை செய்தனர். மூலவர் சன்னதி, உள், வெளிப்பிரகாரங்களில் புண்ணிய தீர்த்தம் தெளித்து கோவில் நடையை திறந்தனர். 

மேலும் செய்திகள்