பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு கோவையில், அரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Update: 2018-01-24 22:45 GMT
கோவை,

பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி மாநிலம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் முற்போக்கு மாணவர் அமைப்புகள் சார்பில் கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று 2-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். அப்போது கல்லூரி முன்பாக மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவர்களை கலைந்து செல்ல கூறினர். ஆனால் பஸ் கட்டணத்தை திரும்ப பெறும்வரை போராட்டம் நீடிக்கும் என்று மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்.

இதனையடுத்து மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் அங்கிருந்து அகற்றினார்கள்.பின்னர் வேனில் ஏற்றினார்கள். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில மாணவர்கள் சாலையில் படுத்து உருண்டனர். இதை தொடர்ந்து மறியல் போராட்டம் நடத்திய 50 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து அந்த பகுதியில் நின்றிருந்த மாணவர்களை போலீசார் விரட்டினார்கள். உடனே மாணவர்கள் அருகில் இருந்த வணிக வளாகம் மற்றும் கடைகளுக்குள் ஓடினார்கள்.

இந்த சம்பவத்தினால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. 

மேலும் செய்திகள்