பஸ் கட்டண உயர்வை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஊட்டி, கோத்தகிரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2018-01-24 22:30 GMT
ஊட்டி,

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். இதில் அரசு ஊழியர்கள் கலந்துகொண்டு பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று கோஷமிட்டனர்.

இதே போல், பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை சார்பில் கோத்தகிரி தாலுகா அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு வட்ட கிளை தலைவர் அய்யனார் தலைமை வகித்தார். வட்ட கிளை செயலாளர் முரளி முன்னிலை வகித்தார். கருவூலகத்துறை ஊழியர் சங்க நிர்வாகி பாஸ்கரன், கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகி லெனின் மற்றும் உரக வளர்ச்சித்துறை வட்டகிளை பொருளாளர் ரவி ஆகியோர் வாழ்த்தி வழங்கினர்.

இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்து அரசு துறை ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் வட்டக்கிளை துணைத்தலைவர் வாசுதேவன் நன்றி கூறினார்.

ஏழை, எளிய நடுத்தர மக்களை பாதிக்கும் பஸ் கட்டண உயர்வை கண்டித்து நீலகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் சகாதேவன் தலைமை தாங்கினார்.

மாவட்ட துணை செயலாளர் மோகன்குமார், அமைப்பாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஊட்டி சட்டமன்ற தொகுதி செயலாளர் கட்டாரி, நகர செயலாளர் இஸ்மாயில் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்