தமிழக அரசு ஏழை மக்களின் மீது சுமையை ஏற்றி வைத்துள்ளது, தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

பஸ் கட்டணத்தை வரலாறு காணாத வகையில் உயர்த்தி ஏழை மக்களின் மீது சுமையை தமிழக அரசு ஏற்றி வைத்துள்ளதாக மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2018-01-24 23:00 GMT
மதுரை,

பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை முனிச்சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது-

தமிழகத்தில் பஸ் கட்டணம் வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தப்பட்டு உள்ளது. மதுரையில் 1,225 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ் கட்டண உயர்வால் மதுரையில் மட்டும் அரசுக்கு தினமும் கூடுதலாக ரூ.50 லட்சம் வரை வசூலாகிறது. அப்படி என்றால் தமிழகம் முழுவதும் எவ்வளவு வசூலாகும்.

பஸ் கட்டண உயர்வை ஏழை எளிய மக்களின் முதுகில் சுமையாக தமிழக அரசு ஏற்றி உள்ளது. தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு கடந்த 7 ஆண்டுகளாக பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை என்று கூறியுள்ளது. அப்படி என்றால் மற்ற துறைகளிலும் வரிகளை உயர்த்த திட்டமிட்டுள்ளதை அரசு சூசகமாக தெரிவிக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அ.தி.மு.க.வை பின்புலத்தில் இருந்து பா.ஜ.க. இயக்குவதாக பலர் கூறுகிறார்கள். அதில் உண்மை இல்லை. அவர்களை இயக்க பா.ஜ.க.வுக்கு அவசியமும் இல்லை.

நடிகர் கமல்ஹாசன் கஜானாவை நோக்கி எங்கள் பயணம் இல்லை என்று கூறியுள்ளார். ரஜினி இன்னும் எதுவும் அறிவிக்கவில்லை. மு.க. ஸ்டாலின் புதிய பறவைகள் பறக்க துடிக்கின்றன என கூறி, ரஜினி, கமல்ஹாசனை குறிப்பிட்டுள்ளார். மேலும் புதிய பறவைகள் பறக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பழைய பறவைகளாகிய நீங்கள் இன்னும் பறக்க முடியவில்லை. தமிழகத்தில் திராவிட அரசியல் எடுபடாது. மக்களை காக்கும் திறமையும், தகுதியும் பாரதீய ஜனதாவுக்கு மட்டுமே உண்டு.

மதுரையில் வருகிற 31-ந்தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. ஆனால் தற்போது வரை தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மத்திய அரசு பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவது தொடர்பாக பரிசீலித்து வருகிறது. உலக அளவில் தொழில் முதலீடுகளை பெறுவதில் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இது பாரதீய ஜனதா அரசின் மிகப்பெரிய சாதனையாகும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்