ஏர்வாடி அருகே மின்வேலியில் சிக்கி இறந்த கிராம உதவியாளரின் உறவினர்கள் சாலைமறியல்

ஏர்வாடி அருகே, மின்வேலியில் சிக்கி இறந்த கிராம உதவியாளரின் உறவினர்கள் நேற்று சாலைமறியல் போராட்டத்தில் நடத்தினர்.

Update: 2018-01-24 21:30 GMT
ஏர்வாடி,

ஏர்வாடி அருகே, மின்வேலியில் சிக்கி இறந்த கிராம உதவியாளரின் உறவினர்கள் நேற்று சாலைமறியல் போராட்டத்தில் நடத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிராம உதவியாளர் சாவு


நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 57). இவர் நம்பித்தலைவன்பட்டயம் கிராமத்தில் கிராம உதவியாளராக (தலையாரி) வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் ஐந்து பனைக்காடு பகுதியில் உள்ள தனது வயலுக்கு சென்றார். அங்கு பெருமாள் என்பவருடைய வயல் அருகே சென்ற போது, அவர் அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி சுந்தரம் இறந்தார்.

இதையடுத்து பெருமாள் மற்றும் அவருடைய மகன்கள் அய்யப்பன், சந்திரன் ஆகியோர் சுந்தரத்தின் உடலை மீட்டு, ஆட்டோவில் ஏற்றி சுந்தரத்தின் வீட்டு முன்பு வைத்துவிட்டு தலைமறைவாகி விட்டனர். அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில், பெருமாள் சட்டத்துக்கு புறம்பாக தனது வயலில் மின்வேலி அமைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாள் மற்றும் அவர்களுடைய மகன்களை தேடி வந்தனர்.

சாலை மறியல்


இந்தநிலையில் நேற்று காலை சுந்தரத்தின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தளவாய்புரம் மெயின் ரோட்டில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் ஏர்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் சாலைமறியலை கைவிட மறுத்தனர்.

பின்னர் நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் கண்ணன், ஏர்வாடி வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை

சுந்தரம் குடும்பத்தினர் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. சுந்தரம் குடும்பத்துக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும், சுந்தரத்தின் மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பேச்சுவார்த்தையின் போது, சுந்தரத்தின் மனைவி மற்றும் மகள்கள், மகன் ஆகியோர் அதிகாரிகளிடம் கதறி அழுதனர். கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்து பரிசீலிப்பதாக அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டு, ரோட்டின் ஓரமாக அமர்ந்து சிறிது நேரம் போராட்டத்தை தொடர்ந்தனர். கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால், உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த சாலை மறியல் போராட்டம், மதியம் 2 மணி வரை நீடித்தது. 5 மணி நேரம் வரை நடந்த இந்த சாலைமறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்