மாநகராட்சி பெண் அதிகாரியின் கைப்பையை திருடிய 5 பேர் கைது

டிரைவரின் கவனத்தை திசை திருப்பி மாநகராட்சி பெண் அதிகாரியின் காரில் இருந்து கைப்பையை திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-01-24 00:21 GMT
மும்பை,

மும்பை மாநகராட்சி ‘பி’ வார்டு உதவி கமிஷனராக இருந்து வரும் பெண் சாந்தா ஜாதவ். இவர் சம்பவத்தன்று கிராபர்டு மார்க்கெட் பகுதியை சேர்ந்த டாக்டர் ஒருவரை பார்க்க காரில் வந்திருந்தார். அப்போது, பெண் அதிகாரி காரில் நகை, பணம், அடங்கிய தனது கைப்பையை வைத்துவிட்டு சென்றார். காரில் டிரைவர் மட்டும் உட்கார்ந்து இருந்தார். அப்போது, அங்கு வந்த ஒருவர் 10 ரூபாய் நோட்டுகள் கீழே கிடப்பதாக தெரிவித்தார்.

இதனை நம்பிய டிரைவர் காரின் கதவை திறந்து கீழே இறங்கினார். அப்போது, மறுபுறம் நின்று கொண்டிருந்த இன்னொருவர் நைசாக காரின் கதவை திறந்து கைப்பையை திருடிக்கொண்டு தப்பிஓடிவிட்டார்.

அந்த கைப்பையில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள நகை, பணம் இருந்தது. இந்த சம்பவம் குறித்து மாநகராட்சி உதவி கமிஷனர் சாந்தா ஜாதவ் பைதோனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, கார் நிறுத்தப்பட்ட இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, கார் டிரைவரை திசை திருப்பி நூதன முறையில் திருட்டில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த ரவீந்திரா, பெருமாள், வினோத், முருகன், அன்சாரி ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கத்திகள், கயிறு, மிளகாய்ப்பொடி போன்றவற்றை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்