பஸ் கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் போராட்டம் மறியலில் ஈடுபட்ட 100 பேர் கைது

பஸ் கட்டண உயர்வை கண்டித்து வேலூர் மற்றும் காட்பாடியில் கல்லூரி மாணவ- மாணவிகள் நேற்று போராட்டம் நடத்தினர். மறியலில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-01-23 23:00 GMT
வேலூர்,

தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை அறிவித்துள்ளது. பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கல்லூரி மாணவ- மாணவிகளும் பஸ் கட்டண உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள் நேற்று காலை வழக்கம்போல கல்லூரிக்கு வந்தனர். ஆனால் அவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமல் கல்லூரி வளாகத்தில் திரண்டிருந்தனர். திடீரென்று பஸ் கட்டண உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஓட்டேரி ரோட்டில் நின்றுகொண்டு பஸ்கட்டண உயர்வை கண்டித்தும், உயர்தத்தப்பட்ட பஸ் கட்டணத்தை திரும்ப பெறக்கோரியும் கோஷமிட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பாகாயம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவ- மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து மாணவ- மாணவிகள் ரோட்டில் இருந்து கல்லூரி வளாகத்திற்குள் சென்று தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும் பஸ் கட்டண உயர்வை கண்டித்து கோஷமிட்டனர். சிறிதுநேரத்துக்கு பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அதேபோன்று காட்பாடியில் உள்ள சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகளும் நேற்று பஸ் கட்டண உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி அருகே வேலூர்- காட்பாடி ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் விருதம்பட்டு போலீசார் சென்று மாணவர்களை மறியலை கைவிடும்படி கூறினர்.

ஆனால் மாணவ-மாணவிகள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 100 மாணவ-மாணவிகள் கைது செய்யப்பட்டனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்