ஈரோடு மாவட்ட அளவில் 90 வகையான கலைத்திறன் போட்டிகள்

ஈரோடு மாவட்ட அளவில் நடந்த 90 வகையான கலைத்திறன் போட்டிகளில் 812 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

Update: 2018-01-23 22:30 GMT
ஈரோடு,

பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளிக்கலை திருவிழா என்ற பெயரில் மாவட்ட அளவிலான கலைத்திறன் போட்டி ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க விழாவுக்கு ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி தலைமை தாங்கினார். கோபி கல்வி மாவட்ட அதிகாரி கலைச்செல்வன் முன்னிலை வகித்தார்.

விழாவில் ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

கிராமிய நடனம், தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பரதநாட்டியம், வில்லுப்பாட்டு இசைத்தல், பறை அடித்தல் உள்பட 90 வகையான கலைத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன.

812 மாணவ-மாணவிகள்

ஈரோடு, கோபிசெட்டிபாளையம் ஆகிய கல்வி மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொண்டனர். இதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 230 பள்ளிக்கூடங்களில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 812 பேர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிக்காட்டினார்கள்.

ஒவ்வொரு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும், ‘ஏ’ கிரேடு பெற்று முதலிடம் பெற்ற மாணவ-மாணவிகள் மாநில அளவிலான கலைத்திருவிழாவில் கலந்துகொள்ள தகுதி பெற்றனர். 

மேலும் செய்திகள்