பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதால் ரெயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்

பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதால் ரெயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

Update: 2018-01-23 23:00 GMT
தஞ்சாவூர்,

தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பஸ் கட்டண உயர்வை உடனே வாபஸ் பெற வேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியதுடன் போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.

பஸ்களில் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளதால் குறைந்த தூரம் முதல் அதிக தூரம் வரை செல்லும் அனைத்து பயணிகளும் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர். இதனால் ரெயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. தஞ்சையில் இருந்தும், தஞ்சை வழியாகவும் சென்னை, எர்ணாகுளம், திருநெல்வேலி, திருச்செந்தூர், காரைக்கால், வேளாங்கண்ணி, மைசூர், ராமேசுவரம், புதுச்சேரி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கூட்டம் அதிகரிப்பு

தற்போது 32-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 35-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களில் தற்போது கூட்டம் அதிக அளவில் காணப்படுகின்றன. முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணிகள் கூட்ட நெரிசலில் நின்றபடி பயணம் செய்து வருகிறார்கள். இது தவிர ரெயில் கழிவறை பகுதிகளிலும் பயணிகள் நின்றுகொண்டே செல்கின்றனர்.

மேலும் ரெயில்கள் முன்பதிவு செய்வதற்கும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பயணிகள் ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பை விட பலமடங்கு கூட்டம் அதிகமாக உள்ளது.

2 பெட்டிகள்

இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி முதல் தஞ்சையில் இருந்து சென்னைக்கு செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக 2 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரெயில் தஞ்சையில் இருந்து தினமும் இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு சென்னைக்கு சென்றடையும்.

இதே போல் சென்னையில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.10 மணிக்கு தஞ்சையை வந்தடையும். வழக்கமாக 20 பெட்டிகளை கொண்டு இயக்கப்பட்டு வந்த இந்த ரெயில், தற்போது 22 பெட்டிகளை கொண்டு இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை இந்த ரெயிலில் 11 தூங்கும் வசதி பெட்டிகள் இருந்தன. தற்போது 13 தூங்கும் வசதி பெட்டிகள் உள்ளன.

சோழன்-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ்

பகல் நேரத்தில் திருச்சியில் இருந்து தஞ்சை வழியாக சென்னைக்கு இயக்கப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் குறைக்கப்பட்டு முன்பதிவு செய்யும் இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த ரெயிலில் முன்பதிவு செய்யும் வசதி கொண்ட பெட்டி 10 இயக்கப்பட்டு வந்தது. இதில் 2 பெட்டிகள் இருக்கை வசதிகளும், 8 பெட்டிகள் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளுமாக இருந்தது.

தற்போது தூங்கும் வசதி கொண்ட பெட்டி 5 ஆக குறைக்கப்பட்டு இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் 5 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தஞ்சை வழியாக இயக்கப்படும் சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் முன்பதிவு வசதி கொண்ட பெட்டிகள் கூடுதலாக 2 இணைக்கப்பட்டுள்ளது.

நிரந்தரமாக இணைப்பு

இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், “பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் தற்போது அனைத்து ரெயில்களிலும் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. மன்னார்குடியில் இருந்து சென்னைக்கு தஞ்சை வழியாக இயக்கப்படும் மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் மார்ச் 1-ந் தேதி முதல் திருவாரூர் வழியாக இயக்கப்படுகிறது. இதனால் இந்த ரெயில் தஞ்சைக்கு வராது. இதையடுத்து பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக தலா 2 பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளன”என்றார். 

மேலும் செய்திகள்