கவிஞர் வைரமுத்துவை விமர்சிப்பவர்களை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

கவிஞர் வைரமுத்துவை விமர்சிப்பவர்களை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2018-01-23 23:00 GMT
புதுச்சேரி,

ஆண்டாள் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கவிஞர் வைரமுத்துவை கண்டித்து புதுவை மற்றும் தமிழக பகுதிகளில் அரசியல் கட்சி மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கவிஞர் வைரமுத்துவை விமர்சிப்பவர்களை கண்டித்து புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள அமுதசுரபி அருகில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் வீரமோகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் இளங்கோ, செயலாளர் சுரேஷ் ஆகியோர் தொடக்க உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர்.

இது பற்றிய தகவல் அறிந்த உடன் பா.ஜ.க.வை சேர்ந்த அகிலன், கோபி, மோகன் மற்றும் இந்து அமைப்பினர் 40க்கும் மேற்பட்டோர் அங்கு ஒன்று கூடினர். அங்கு அவர்கள் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்த உடன் பெரியக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முறையாக அனுமதி பெற்று போராட்டம் நடத்துகின்றனர். எனவே, நீங்கள் கலைந்து செல்லுங்கள் என வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் அதனை கேட்காமல் தொடர்ந்து கோஷமிட்டனர். திடீரென அவர்கள் காந்திசாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்ற முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் வேனில் ஏற மறுத்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்து குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றி சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்