நேரு பூங்கா- சென்டிரல் இடையே இம்மாத இறுதியில் சோதனை ஓட்டம் அதிகாரிகள் தகவல்

தேனாம்பேட்டை- சைதாப்பேட்டை, நேரு பூங்கா- சென்டிரல் இடையே இம்மாத இறுதியில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் கூறினார்கள்.

Update: 2018-01-23 22:45 GMT
சென்னை,

சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரெயில் பாதையில் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையம், 2-வது வழித்தடமான சென்னை சென்டிரல் பரங்கிமலை வழித்தடத்தில் உள்ளது. இங்கு நடந்து வரும் மெட்ரோ ரெயிலுக்கான பணிகள் நிறைவடையாததால் விமான நிலையத்தில் இருந்து நேரு பூங்கா வரை மட்டுமே ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

மீதி பணிகளையும் விரைந்து முடித்து எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்கள் வரை மெட்ரோ ரெயிலை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது நேரு பூங்கா- சென்டிரல் இடையே மெட்ரோ ரெயில் இயக்குவதற்கு முன்பாக சோதனை ஓட்டம் இம்மாத இறுதியில் நடத்தப்பட உள்ளன.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

மெட்ரோ ரெயில் சேவைக்காக நேரு பூங்கா- சென்டிரல் இடையே 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு தோண்டப்பட்ட 2 சுரங்கப்பாதைப்பணிகளும் முற்றி லுமாக நிறைவடைந்து விட்டன. அதில் எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்களில் இறுதிகட்டப்பணிகள் நடந்து வருகிறது.

தொடர்ந்து நேருபூங்கா- சென்டிரல் இடையே டீசல் என்ஜின் உதவியுடன் தண்டவாளத்தின் உறுதி தன்மை மற்றும் பாதுகாப்பு நலன் கருதி அமைக்கப்பட்டுள்ள கருவிகள் குறித்தும் சோதனை ஓட்டம் மூலம் கண்டறியப்பட உள்ளனர். இதற்காக இம்மாத இறுதியில் இந்தப்பாதையில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இதேபோன்று தேனாம்பேட்டை- சைதாப்பேட்டை இடையே சுரங்கப்பாதையில் தேனாம்பேட்டை, ஏஜி-டி.எம்.எஸ்., நந்தனம், சைதாப்பேட்டை ஆகிய 4 ரெயில் நிலையங்களிலும் அனைத்து பணிகள் நிறைவடைந்து விட்டன. ஒரே நேரத்தில் நேரு பூங்கா- சென்டிரல் மற்றும் தேனாம்பேட்டை- ஏஜி-டி.எம்.எஸ். ஆகிய 2 வழித்தடங்களிலும் சோதனை ஓட்டம் இம்மாத இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த வழித்தடங்கள் குறித்த விவரங்கள் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதனை ஆய்வு செய்த பின்னர் வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்ய உள்ளார். தொடர்ந்து மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் மாதங்களில் இந்த பாதையில் பயணிகள் ரெயிலை இயக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்