பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-23 23:00 GMT
சென்னை,

பஸ் கட்டண உயர்வை அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைமுறைக்கு கொண்டு வந்தது. பஸ் கட்டண உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கல்லூரி மாணவர்களும் பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.

கடந்த ஆண்டு இதே நேரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எப்படி போராட்டம் நடந்ததோ? அதேபோல், இப்போது தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் மாணவ- மாணவிகள் போராட்டத்தை கையில் எடுத்து இருக்கின்றனர்.

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் சென்னை கே.கே.நகர் போக்குவரத்து பணிமனை எதிரே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஜான்சிராணி தலைமை தாங்கினார்.

இதில் மாநில செயலாளர் உச்சிமாகாளி, மாவட்ட தலைவர் சந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் குறித்து மாநில செயலாளர் உச்சிமாகாளி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 2 கோடி மக்கள் அரசு பஸ்சை நம்பி தான் பயணம் செய்து வருகிறார்கள். இந்த கட்டண உயர்வு அவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உழைப்பில் பெரும் பகுதியை போக்குவரத்துக்காக ஒதுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அரசு உயர்த்திய பஸ் கட்டணத்தை உடனே திரும்ப பெற வேண்டும். போக்குவரத்து சேவையை அரசு பலப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் தான் இது மக்களுக்கான சேவையாக இருக்கும். மேலும் 70 சதவீதம் பஸ்கள் மோசமான நிலையில் இருக்கிறது. அதையும் அரசு மாற்ற வேண்டும். இப்படி ஜனநாயக ரீதியான போராட்டத்தை கையில் எடுப்பவர்களை அரசு, போலீசார் மூலம் ஒடுக்க முயற்சிக்கிறது. மீண்டும் ஒரு மெரினா போராட்டம் தோன்றிவிடுமோ? என்ற அச்சத்தில் பல்வேறு அடக்குமுறைகளை அரசு மேற்கொள்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவொற்றியூர் பூந்தோட்ட பள்ளி வளாகத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று பகலில் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு கல்லூரி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்