அரசு அதிகாரிகள் பணி இடமாற்றத்தில் அரசியல் இல்லை பரமேஸ்வர் பேட்டி

அரசு அதிகாரிகள் பணி இடமாற்றத்தில் அரசியல் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் கூறினார்.

Update: 2018-01-23 21:25 GMT
பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அரசு அதிகாரிகள் பல்வேறு காரணங்களுக்காக பணி இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். நிர்வாக வசதிக்காக இது அவ்வப்போது நடக்கிறது. இதில் அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. இதில் அரசியல் இல்லை. இதுபற்றி கேள்வி கேட்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. இந்த விஷயத்தில் தேவேகவுடா அவருடைய கருத்தை கூறி இருக்கிறார். அதுபற்றி நான் ஒன்றும் கூற முடியாது.

வேறு கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் விலகி எங்கள் கட்சிக்கு வர தயாராக இருக்கிறார்கள். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிப்ரவரி 10-ந் தேதி முதல் 3 நாட்கள் கர்நாடகத்தில் முதல்கட்ட சுற்றுப்பயணம் செய்கிறார். இதுகுறித்து இன்று(நேற்று) கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினேன். ராகுல் காந்தி ஒசப்பேட்டேயில் நடைபெறும் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

முதல் நாள் இரவு அவர் ஒசப்பேட்டேயில் தங்குகிறார். ராகுல் காந்தி பஸ் மூலமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்து மக்களிடம் ஆதரவு திரட்டுவார். கடைசி நாள் அதாவது 3-வது நாள் கலபுரகி மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பீதரில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். 25-ந் தேதி(நாளை) ராகுல் காந்தியின் பாதுகாப்பு குழுவினர் ஒசப்பேட்டேக்கு வருகை தருகிறார்கள்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார். 

மேலும் செய்திகள்