ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியையிடம் 16 பவுன் நகைகள் திருட்டு

தூத்துக்குடியில், ஓடும் பஸ்சில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் 16 பவுன் நகைகளை மர்ம மனிதர் திருடி சென்றார்.

Update: 2018-01-23 20:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில், ஓடும் பஸ்சில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் 16 பவுன் நகைகளை மர்ம மனிதர் திருடி சென்றார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். இவருடைய மனைவி ஜாய்ஸ் மங்கலவள்ளி (வயது 59). ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியை. இவர், கடந்த 29.11.2017 அன்று தூத்துக்குடியில் நடந்த உறவினர் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு அரசு பஸ்சில் வந்தார். புது பஸ் நிலையத்தில் இறங்கிய அவர், அங்கு இருந்து ஆட்டோ மூலம் அன்னை இந்திரா நகரில் உள்ள திருமண மண்டபத்திற்கு சென்றார்.

16 பவுன் நகைகள் திருட்டு

அப்போது அவர் கொண்டு வந்த கைப்பையில் இருந்த நகை பெட்டியை மர்ம மனிதர் திருடி சென்றது தெரியவந்தது. அந்த நகை பெட்டியில் 16 பவுன் எடையுள்ள தங்க சங்கிலிகள், நெக்லஸ்கள், கம்மல் ஆகியவை இருந்ததாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து ஜாய்ஸ் மங்கலவள்ளி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். இந்த புகார் மீது சிப்காட் போலீசார் விசாரணை நடத்திட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் ‘ஜாய்ஸ் மங்கலவள்ளி பஸ்சில் வரும்போது, மர்ம மனிதர் நகைகளை திருடி இருப்பது’ தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்