திசையன்விளை அருகே இடையன்குடியில் உள்ள கால்டுவெல் நினைவு இல்லத்தை வம்சாவளியினர் பார்வையிட்டனர்

திசையன்விளை அருகே இடையன்குடியில் உள்ள கால்டுவெல் நினைவு இல்லத்தை வம்சாவளியினர் பார்வையிட்டனர்.

Update: 2018-01-23 21:15 GMT
திசையன்விளை,

திசையன்விளை அருகே இடையன்குடியில் உள்ள கால்டுவெல் நினைவு இல்லத்தை வம்சாவளியினர் பார்வையிட்டனர்.

பி‌ஷப் கால்டுவெல்

தமிழ் மொழிக்கு ஒப்பிலக்கணம் எழுதிய பி‌ஷப் கால்டுவெல் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இடையன்குடியில் வசித்து வந்தார். அவர் வாழ்ந்த இல்லத்தை தமிழக அரசு நினைவு இல்லமாக பராமரித்து வருகிறது. கால்டுவெல் இறந்த பிறகு அவரது உடல் இடையன்குடி தூய திருத்துவ ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பி‌ஷப் கால்டுவெல் வம்சாவளியைச் சேர்ந்த டேசா, கேட் ஆகியோர் இங்கிலாந்து நாட்டில் இருந்து இடையன்குடிக்கு நேற்று வந்தனர். அவர்களை சேகரகுரு சந்திரகுமார், உதவி சேகரகுரு பிரசாந்த், மருதூர் மணிமாறன், சேகர செயலாளர் ஜேகர், பொருளாளர் கிறிஸ்டோபர் மற்றும் ஊர் மக்கள் வரவேற்றனர்.

பார்வையிட்டனர்

பின்னர் அவர்கள் இருவரும் பி‌ஷப் கால்டுவெல், அவருடைய மனைவி எலைசா ஆகியோரது நினைவிடங்களை பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கால்டுவெல் நினைவு இல்லத்தை பார்வையிட்டனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்த தங்கள் வம்சாவளியினரின் பழைய புகைப்படங்கள் மற்றும் பொருட்கள், பி‌ஷப் கால்டுவெல் அணிந்த ஆடைகளையும், அவர் பயன்படுத்திய கட்டில் உள்ளிட்ட பொருட்களையும் பார்வையிட்டனர்.

மகிழ்ச்சி அளிக்கிறது

பின்னர் டேசா, கேட் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:–

எங்கள் வம்சாவளியை சேர்ந்த பி‌ஷப் கால்டுவெல் தமிழ் மொழிக்கு ஒப்பிலக்கணம் எழுதியுள்ளார் என்பதை படித்துள்ளோம். ஆனால் இங்கு வந்த பிறகுதான் அவரது தமிழ் பணியை நேரில் அறிந்து கொண்டோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவரது பெயரில் இங்கு பள்ளிக்கூடங்கள், சாலைகள், விளையாட்டு மைதானங்கள், அவருடைய மனைவி பெயரில் கல்லூரி, அவர் நிறுவிய ஆஸ்பத்திரி ஆகியன செயல்பட்டு வருவது எங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

எங்கள் வம்சாவளியினரை இன்றளவும் இப்பகுதி மக்கள் மனதில் வைத்து இருப்பது எங்களை நெகிழ்ச்சி அடைய செய்கிறது. தமிழக அரசு, கால்டுவெல் வாழ்ந்த இல்லத்தை பராமரித்து வருவது எங்களது குடும்பத்துக்கு பெருமையாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்