திரிபுராவில் இறந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் உடல் அடக்கம் தூத்துக்குடியில் நடந்தது

திரிபுராவில் இறந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் உடல் 27 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரான தூத்துக்குடியில் அடக்கம் செய்யப்பட்டது.

Update: 2018-01-22 22:45 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னிருகைபெருமாள். இவருடைய மகன் சுப்பையா (வயது 25). இவர் திரிபுராவில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். இவர் ஊருக்கு வருவதற்காக ஒரு மாதம் விடுப்பு எடுத்து இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் திரிபுராவில் உள்ள தனது நண்பர் சுராஜ் என்பவர் வீட்டிற்கு சென்றார். அங்கு அவர் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்து விட்டதாக கூறப்படுகிறது.தகவல் அறிந்த எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள், இறந்த சுப்பையாவின் உடலை மீட்டு விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர்.

உடல் அடக்கம்

அதன்படி அவரது உடல் விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ராணுவ வாகனம் மூலம் தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தூத்துக்குடி தாசில்தார் ராமச்சந்திரன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.பின்னர் 9 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 27 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சுப்பையா உடல் அடக்கம் செய்யப்பட்டது. எல்லை பாதுகாப்பு படை வீரர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்