பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்வித்துறை அலுவலக பணியாளர்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்வித்துறை அலுவலக பணியாளர்கள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.

Update: 2018-01-22 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகம் ஆகியவற்றில் பணியாற்றி வரும் தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்க மாநில துணைத் தலைவர் ராஜராஜன் தலைமை தாங்கினார்.

அனைத்து வகையான பதவி உயர்வுகளையும் வருகிற 31-ந் தேதிக்குள் வழங்க வேண்டும். அரசு தேர்வு பணிகளில் இருந்து பணியாளர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். பொது கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும். அரசு நலத்திட்டங்களை தனியார் மூலம் செயல்படுத்த வேண்டும். அரசு ஆணை எண்: 595-ன்படி மேம்படுத்தப்பட்ட பணியிடங்களை வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்களுக்கு முறையான பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணியும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

கருப்பு சின்னம்

இந்த போராட்டம் வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போராட்டத்தில் 716 பேர் ஈடுபட்டுள்ளனர். வருகிற 29-ந் தேதி முதல் 2-ந் தேதி வரை கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் நடத்தவும், 7-ந் தேதி காலை 10.30 மணிக்கு பள்ளி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. 

மேலும் செய்திகள்