மரக்காணத்தில் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கியது

மரக்காணத்தில் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கியுள்ளது.

Update: 2018-01-22 22:30 GMT
மரக்காணம்,

மரக்காணம் பகுதி கடற் கரையோரங்களில் மத்திய, மாநில அரசுக்கு சொந்தமான 3,500 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை உப்பு உற்பத்தி நடைபெறும். ஆண்டுதோறும் இங்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மற்றும் புதுவை, கேரளா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. உப்பு உற்பத்தி செய்யும் தொழிலில் மரக்காணம் பகுதியை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

பாத்தி அமைக்கும் பணி

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி செய்யும் பணி தற்போது தொடங்கப்பட உள்ளது.

இதையொட்டி தொழிலாளர்கள் உப்பளங்களுக்கு பாத்திகள் அமைப்பது, கால்வாய்கள் அமைத்து தண்ணீரை தேக்கி வைப்பது போன்ற முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர் ஒருவர் கூறுகையில், நடப்பாண்டில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் உப்பு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் உப்பு உற்பத்தி பலமடங்கு அதிகரிக்கும். மேலும் இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு திறந்தவெளி பகுதிகளில் வைக்கப்பட்டு வருகிறது. திடீரென மழை பெய்யும்போது, உப்பு வீணாகும் நிலை உள்ளது. ஆகவே உப்பை பாதுகாப்பாக வைக்க மரக்காணம் பகுதியில் சேமிப்பு கிடங்கு அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

மேலும் செய்திகள்