பஸ் கட்டணத்தை திரும்ப பெறும்வரை போராட்டம் நடத்துவோம் தொல்.திருமாவளவன் பேட்டி

பஸ் கட்டணத்தை திரும்ப பெறும்வரை போராட்டம் நடத்துவோம் என்று விருத்தாசலத்தில் தொல்.திருமாவளவன் கூறினார்.

Update: 2018-01-21 22:45 GMT
விருத்தாசலம்,

தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். 6 ஆண்டுகளுக்கு பிறகு பஸ் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறோம் என்றும், பிற மாநிலங்களை விட தமிழகத்தில் மிக குறைவான கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது என்றும் ஆட்சியாளர்கள் கூறுவது ஏற்புடையதல்ல. தமிழகத்தில் விலை வாசியை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் ஒரு நல்ல அரசின் முடிவாக இருக்க முடியும்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்த காலத்தில் கூட பஸ் கட்டண உயர்வு நிகழ்ந்தது இல்லை. போக்குவரத்து தொழிலாளர்கள் போராடினார்கள் என்பதற்காக அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அவ்வளவு பாரத்தையும் சாதாரண அப்பாவி மக்கள் மீது திணித்திருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

போராட்டம் தொடரும்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து வருகிற 23-ந் தேதி(நாளை) சென்னையில் எனது தலைமையிலும், 24-ந் தேதி அந்தந்த மாவட்ட தலைநகரங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடத்த இருக்கிறோம். வருகிற 27-ந் தேதி தி.மு.க. நடத்தும் போராட்டத்திலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவை தெரிவிக்கும். பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறும் வரையில் போராட்டம் நடத்துவோம். எங்களது போராட்டம் தொடரும்.

தமிழகத்தில் மதவாத சக்திகள் திட்டமிட்டு வன்முறையை தூண்ட முயற்ச்சிக்கின்றன. கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் வன்முறையை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட முயற்ச்சிப்பவர்களை மக்கள் கவனித்து கொண்டு இருக்கிறார்கள். இந்த மண்ணில் அந்த சக்திகளுக்கு எப்போதும் இடமில்லை என்பதை தேர்தல் நேரத்தில் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்