நல்லிணக்கத்திற்கான மாரத்தான் ஓட்டம் நாராயணசாமி தொடங்கி வைத்தார்

புதுவை கடற்கரையில் நல்லிணக்கத்திற்கான மாரத்தான் ஓட்டத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்.

Update: 2018-01-21 23:00 GMT
புதுச்சேரி,

பிரம்ம குமாரிகள் சமூக ஆன்மிக தன்னார்வ தொண்டு இயக்கத்தின் 80-வது ஆண்டுவிழா அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கான இறை ஞானம் என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக மனித நேயம் மற்றும் நல்லிணக்கத்திற்கான மாரத்தான் ஓட்டம் புதுவை கடற்கரையில் நேற்று நடந்தது.

இதை முதல்-அமைச்சர் நாராயணசாமி, போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். நிகழ்ச்சியில் பிரம்மகுமாரிகள் இயக்கத்தின் புதுவை, தென்கேரள சேவை ஒருங்கிணைப்பாளர் ராஜயோகினி பீனா கலந்துகொண்டு, தற் போதைய சூழ்நிலையில் மனிதகுல மேம்பாட்டிற்கு பாரபட்சமற்ற அன்பு மற்றும் ஒற்றுமை இருக்கவேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் புதுவை நகராட்சி ஆணையர் கணேசன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரமேஷ்பாபு, சிங்காரவேலு, டாக்டர்கள் சித்ராபானு, அஷ்வினி உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த மாரத்தான் ஓட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

கடற்கரை காந்தி சிலை அருகே தொடங்கிய ஓட்டம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக 5½ கிலோ மீட்டர் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாலையில் கடற்கரை சாலையில் நடந்த விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன. 

மேலும் செய்திகள்