தண்டவாளத்தில் கிடந்த உடல் அடையாளம் தெரிந்தது: பிரபல கொள்ளையன் கொலையா?

வாழப்பாடி அருகே தண்டவாளத்தில் கிடந்த உடல் அடையாளம் தெரிந்தது. பிரபல கொள்ளையனான அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-01-21 23:00 GMT
வாழப்பாடி,

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டி தண்டவாளத்தில் கடந்த 17-ந்தேதி தலைதுண்டான நிலையில் 32 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் உடல் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.தலைநசுங்கி உடலில் எந்தவித காயமும் இல்லாமல் இருந்த உடலை கைப்பற்றி சேலம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர் என்று தெரியாமல் இருந்தது. இதன்பின்னர் இந்த வழக்கு வாழப்பாடி போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. போலீஸ் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர், வாழப்பாடி பள்ளத்தாதனூர் அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தைச்சேர்ந்த ‘ஆர்ட்’ சுரேஷ் என்ற சுரேஷ்குமார் (வயது 32) என்பது தெரியவந்தது. இவர் சுவர் ஓவியங்கள், பெயர் பலகைகள் எழுதும் வேலைபார்த்து வந்தார். இவர் மீது சேலம், வாழப்பாடி, காரிப்பட்டி, நாமக்கல் மாவட்ட போலீஸ் நிலையங்களில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் என சுமார் 20 குற்ற வழக்குகளுக்கு மேல் நிலுவையில் உள்ளன. சுரேஷ்குமாரின் மனைவி சண்முகப்பிரியா (23). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 16-ந்தேதி வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் 17-ந் தேதி தலைநசுங்கி தண்டவாளத்தில் கிடந்த உடலால் மர்மம் நீடித்து வருகிறது.

பிரபல கொள்ளையன் சுரேஷ்குமார் கடந்த 2016-ம் ஆண்டு குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைதாகி ஓராண்டு சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முத்தம்பட்டி ரெயில்வே தண்டவாளத்தில் அதே பகுதியில் கடந்த மாதம் விஜயன் என்ற கொள்ளையன் கள்ளக்காதல் விவகாரத்தால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தற்போது அதே பகுதியில் சுரேஷ்குமார் உடல் கிடந்தது வாழப்பாடி பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்