வட கர்நாடகத்தில் மக்களின் ஆதரவை பெற வியூகம் சட்டசபை தேர்தலில் சித்தராமையா 2 தொகுதிகளில் களம் இறங்குகிறார்

வட கர்நாடகத்தில் மக்களின் ஆதரவை பெற கர்நாடக சட்டசபை தேர்தலில் சித்தராமையா 2 தொகுதிகளில் களம் இறங்குகிறார்.

Update: 2018-01-21 22:00 GMT
பெங்களூரு,

வட கர்நாடகத்தில் மக்களின் ஆதரவை பெற கர்நாடக சட்டசபை தேர்தலில் சித்தராமையா 2 தொகுதிகளில் களம் இறங்குகிறார்.

சூறாவளி சுற்றுப்பயணம்

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாத இறுதியில் நடைபெற உள்ளது. தேர்தலை கருத்தில் கொண்டு முதல்-மந்திரி சித்தராமையா சாதனை விளக்க பொதுக்கூட்டம் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் காங்கிரசுக்கு ஆதரவு திரட்டினார். மேலும் பல கோடி ரூபாய்க்கு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

இதேபோல் முன்னாள் முதல்-மந்திரியும், கர்நாடக மாநில பா.ஜனதா தலைவருமான எடியூரப்பாவும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமியும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்கள் கட்சிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். இதுமட்டுமல்லாமல் தேர்தலில் பா.ஜனதாவை வெற்றிபெற வைப்பதற்காக அக்கட்சியின் மேலிட தலைவர் அமித்ஷா தேர்தல் முடியும் வரை கர்நாடகத்திலேயே தங்க முடிவு செய்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியும் கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெறுவதற்காக காய்நகர்த்தி வருகிறார்.

சித்தராமையாவின் மகன்

இது ஒருபுறம் இருக்க இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை (முழு மெஜாரிட்டி) கிடைக்காது என்று இதுவரை வெளியாகியுள்ள கருத்து கணிப்புகள் கூறுகின்றன. வட கர்நாடகத்தை பொறுத்தவரையில் பா.ஜனதாவின் பலம் வாய்ந்தாக உள்ளது. அங்கு லிங்காயத்துகள் அதிகமாக உள்ளனர். பா.ஜனதா கட்சியின் மாநில தலைவராக இருக்கும் எடியூரப்பாவும் அதே சமுதாயத்தை சேர்ந்தவர்.

அந்த பகுதியில் லிங்காயத்துக்கு அடுத்தபடியாக குருபா சமூக ஓட்டுகளும் கணிசமாக இருக்கிறது. இதனால் வட கர்நாடகத்தில் பா.ஜனதாவின் பலத்தை குறைக்கவும், காங்கிரஸ் பக்கம் மக்களை இழுக்கவும் சித்தராமையா திட்டமிட்டு வியூகம் வகுத்துள்ளார். சித்தராமையா தனது தொகுதியான வருணாவில் இந்த முறை போட்டியிடுவது இல்லை என்றும், மைசூரு சாமுண்டீஸ்வரியில் களம் காண உள்ளதாகவும் அவர் அறிவித்து இருக்கிறார். வருணா தொகுதியில் சித்தராமையா தனது மகன் டாக்டர் யதீந்திராவை நிறுத்த முடிவு செய்துள்ளார்.

புதிய வியூகம்

மேலும் வட கர்நாடகத்தில் உள்ள மக்களின் ஆதரவை பெற்று அவர்களை காங்கிரஸ் பக்கம் ஈர்க்க சித்தராமையா புதிய வியூகம் வகுத்துள்ளார். அதற்காக அவர் வடகர்நாடகத்திலும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக குருபா மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் அவர் களம் இறங்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

அதனால் இந்த முறை நடைபெறும் சட்டசபை தேர்தலில் சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். வட கர்நாடகத்தில் போட்டியிடுவது என்பது சித்தராமையாவின் புதிய வியூகம் ஆகும்.

மேலும் செய்திகள்