கவர்னர் வருகையால் வேலூர் கோட்டையில் தூய்மைப்பணி கலெக்டர் ஆய்வு

கவர்னர் வருகையால் வேலூர் கோட்டையில் தூய்மைப்பணி நடந்தது. சுத்தம் செய்யும் பணியை கலெக்டர் ராமன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.;

Update: 2018-01-21 23:00 GMT
வேலூர்,

காட்பாடியில் நேற்று மாலை மாதா அமிர்தானந்தமயி சார்பில் தியானகூட்டம், பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டார். இதனையடுத்து அவர், இன்று (திங்கட்கிழமை) வேலூர் கோட்டை, வேலூர் புதிய பஸ் நிலையம் பகுதி உள்பட பல்வேறு இடங்களில் தூய்மை திட்ட பணியில் ஈடுபடுகிறார்.

கவர்னரின் வருகையையொட்டி பல்வேறு முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. ஒருபுறம் மாவட்ட காவல்துறை எந்தஎந்த இடங்களில் பாதுகாப்பு அளிக்க வேண்டும், எந்த இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்ய வேண்டும், பாதுகாப்பு எங்கு அதிகப்படுத்த வேண்டும் என்ற பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கவர்னர் வருகையையொட்டி வேலூரில் முக்கிய சாலைகள் சுத்தம் செய்யும் பணி நடந்தது. பல நாட்களாக கேட்பாரற்று இருந்த இடங்கள் புதுப்பொலிவு கொண்டு வரும் நோக்கில் சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். காட்பாடி பள்ளிக்கு செல்லும் வழியில் சாலைகள் பழுதடைந்து காணப்பட்டதால் அவசர அவசரமாக சாலை புதுப்பிக்கும் பணி நடந்தது.

மேலும் பல நாட்களாக வேலூர் பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் பல இடங்களில் சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதில் நடந்த விபத்துகளில் பலர் காயமடைந்துள்ளனர். குண்டும், குழியுமான சாலையை மூட வேண்டும் என்று பயணிகள் பலமுறை மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தற்போது கவர்னரின் வருகையை முன்னிட்டு சாலைகளில் உள்ள குண்டும் குழியையும் மூடி உள்ளனர்.

இதைப்பார்க்கும் போது சாலைகளுக்கு ‘பஞ்சர்’ ஒட்டியது போல் பல இடங்களில் காணப்படுகிறது. இதனை பார்த்து செல்லும் பொதுமக்கள் கவர்னர் வந்தால் தான் வேலை நடக்குமா? என்று அதிகாரிகள் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

வேலூர் கோட்டையை கவர்னர் பார்வையிட உள்ளதால் கோட்டை பகுதியில் தூய்மை பணி நேற்று படுஜோராக நடந்தது. குப்பைகள் சூழ்ந்து காணப்பட்ட கோட்டை வளாகப்பகுதிகளில் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். மேலும் கோட்டை மதில்சுவர் நடைபாதைகளில் உள்ள செடிகொடிகள் அப்புறப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் கவர்னர் பார்வையிடும் பகுதிகளில் ஒன்றான வேலூர் கோட்டை எவ்வாறு உள்ளது, சுத்தம் செய்யும் பணி எவ்வாறு நடக்கிறது, எந்த இடத்திற்கு கவர்னரை அழைத்து செல்ல வேண்டும் என்பது குறித்து கோட்டையில் கலெக்டர் ராமன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கொத்தளம், அருங்காட்சியகம், ஜலகண்டேஸ்வரர் கோவில் பகுதி, மதில்சுவர் நடைபாதைகளுக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், உதவி கலெக்டர் செல்வராஜ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்