வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவவீரர்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்து

வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

Update: 2018-01-21 22:15 GMT
வேலூர்,

இந்திய ராணுவத்தில் மிகவும் பழமை வாய்ந்த அமைப்பான மதராஸ் என்ஜினீயரிங் குரூப் (பாய்ஸ்) பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இந்த அமைப்பின் சார்பில் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி வேலூரில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கேப்டன் மனோகரன், நைப் சுபேதார் காண்டீபன், கேப்டன் சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். கேப்டன் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். லெப்டினண்ட் கர்னல் ஜெய்குமார் வரவேற்றார். மதராஸ் என்ஜினீயரிங் குரூப் வரலாறு குறித்து கேப்டன் வேல்முருகன் பேசினார்.

இதில் சிறப்பு விருந்தினராக மேஜர் ஜெனரல் எஸ்.ஜி.வம்பேத்கர், கர்னல் எம்.எஸ்.கபூர், கர்னல் பரிமு, மேஜர் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினர்.

பின்னர் மேஜர் ஜெனரல் எஸ்.ஜி.வம்பேத்கர் பேசியதாவது:-

என்னுடன் பணி செய்தவர்களை இந்த நிகழ்ச்சியில் காணும் போது நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இளைஞர்களாக உங்களை கண்ட நான் தற்போது முதியவர்கள் தோற்றத்தில் காண்கிறேன். காலம் கடந்து பழைய நினைவுகளை நினைத்து பார்க்கிறேன். ‘பாய்ஸ்’ அமைப்பு இளைஞர்களை தயார்படுத்தி ராணுவத்திற்கு அனுப்பி உள்ளது. இதில் பயிற்சி பெற்றவர்கள் தொட்ட இடமெல்லாம் தங்கமாக துலங்கியது. நாம் வேலை செய்த இடத்தில் நல்ல பெயர்களை வாங்கி உள்ளோம். சிறந்த பணியாற்றி நற்பெயர்களை பெற்றவர்கள் ஏராளமானோர் இங்கு வந்துள்ளனர்.

முதன் முதலாக இங்கு தான் முன்னாள் ‘பாய்ஸ்’ அமைப்பில் பயிற்சி பெற்ற முன்னாள் படைவீரர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதேபோல ஆண்டு தோறும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் பல நிகழ்ச்சிகள் நடத்தி நம்முடைய நினைவுகளை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். நீங்களும், உங்களுடைய குடும்பத்தினரும் நலமாக இருக்க இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரரான நைப் சுபேதார் ராஜூ கவுரவிக்கப்பட்டார். 94 வயதான அவர் 1943-ல் ராணுவத்தில் சேர்ந்து பல போர்களில் திறம்பட செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து நாட்டிற்காக வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் 1962 -ம் ஆண்டு சீனாவுடனான போர் முதல் கார்கில் போர் வரை கலந்து கொண்டவர்கள். இவர்கள் வெகு நாட்களுக்கு பிறகு ராணுவத்தில் பணியாற்றிய போது நடந்த தங்களது நினைவுகளை பரிமாறிக்கொண்டனர். அப்போது ஒருவருக்கொருவர் கட்டியணைத்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

இது குறித்து முன்னாள் ராணுவீரர்கள் கூறுகையில், “உடலளவில் தான் நாங்கள் வயதாகி உள்ளோம். மனதளவில் போருக்கு தயாராக உள்ளோம். இந்தியாவுடன் வேறு நாடுகள் போரிட வந்தால் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே போதும் அவர்களை தோற்கடித்து விரட்டுவோம்” என்றனர். 

மேலும் செய்திகள்