ஆர்.கே.நகர் தொகுதியில் வழங்கப்பட்ட 20 ரூபாய் டோக்கன் மாயாஜாலம் இனி எப்போதும் எடுபடாது

ஆர்.கே.நகர் தொகுதியில் வழங்கப்பட்ட 20 ரூபாய் நோட்டு மாயாஜாலம் இனி எப்போதும் எடுபடாது என்று அமைச்சர் உதயகுமார் பேசினார்.

Update: 2018-01-21 22:45 GMT
பேரையூர்,

டி.கல்லுப்பட்டியில் எம்.ஜி.ஆர். 101-வது பிறந்தநாள் விழாவையொட்டி பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- உரிமைகளுக்காக சண்டை போட்ட நாம், தற்போது இரு அணியினரும் ஒன்று சேர்ந்து கட்சியையும், ஆட்சியையும் நல்ல வழியில் நடத்தி வருகிறோம்.

இந்தநிலையில் ஜெயலலிதாவால் 10 வருடம் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு நபர் தற்போது நான் தான் அனைத்தும், என் பின்னால் வாருங்கள் என்றார். அதை நாம் எப்படி ஏற்றுக்கொள்வது. எதிர்கட்சிகள் கூறியபடி பலத்தை நிரூபித்து ஆட்சியை நிலை நிறுத்தி உள்ளோம். எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை சிறப்பாக கொண்டாடினோம். ஜெயலலிதாவின் அரசை யாரும் குறை கூறமுடியாதபடி மக்களுக்காக நல்ல திட்டங்களை செய்து வருகிறோம்.

பஸ்கட்டணம் திடீர் என்று உயர்த்தியதை கேட்கிறார்கள், அரசுக்கு பஸ் கட்டணத்தை கூட்டும் எண்ணமில்லை. போக்குவரத்து கழகம் சேவை மனப்பான்மையுடன் செயல்படுகிறது. அதற்கு நிதி தேவைப்படுகிறது என்பதற்காக பஸ் கட்டண உயர்வை கொடுத்துள்ளோம். நிதி பற்றாக்குறை காரணமாக எந்த திட்டத்தையும் நாங்கள் நிறுத்தவில்லை.

ஆர்.கே.நகர் தேர்தல், இரட்டை இலை என்னாச்சு என்கின்றனர். எங்களுக்கு ரூ.20 டோக்கன் பற்றி அப்போது தெரியவில்லை. தற்போது புரிந்து கொண்டோம். இனிமேல் 20 ரூபாய் நோட்டு டோக்கன் மாயாஜாலம் இனி எப்போதும் எடுபடாது. மக்கள் அதை முறியடிப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் சுறு சுறு சுப்பையா, பேரவை செயலாளர் தமிழரசன், இலக்கிய அணி செயலாளர் வக்கீல் திருப்பதி, முன்னாள் ஒன்றிய குழு துணைத்தலைவர் டாக்டர் பாவடியான், பேரூராட்சி முன்னாள் தலைவர் மாணிக்கம், ஒன்றிய எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் வக்கீல் பாஸ்கரன், நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்