திருப்பூர் மருத்துவ மாணவர் இறப்புக்கு நீதி கேட்டு உண்ணாவிரத போராட்டம்

திருப்பூர் மருத்துவ மாணவர் சரத்பிரபுவின் இறப்புக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகள் சார்பில் திருப்பூரில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

Update: 2018-01-20 22:45 GMT
திருப்பூர்,

டெல்லியில் உள்ள மருத்துவ கல்லூரியில் திருப்பூர் பாரப்பாளையத்தை சேர்ந்த சரத்பிரபு என்ற மாணவர் படித்து வந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்தார். இந்த இறப்பிற்கு பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த மரணத்தின் மீது தகுந்த நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், மாணவர் சரத்பிரபுவின் மரணத்திற்கு நீதி விசாரணை கேட்டு திருப்பூர் ரெயில் நிலையம் அருகில் பல்வேறு அமைப்புகள் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பிரவின், த.மு.எ.ச. மாவட்ட தலைவர் குமார், டி.ஒய்.எப்.ஐ. மாவட்ட செயலாளர் மணிகண்டன், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கதிர்வேல், தமிழ்நாடு அனைத்து முறை அனுபவ மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில், திருப்பூரில் இருந்து டெல்லிக்கு மருத்துவ கல்வி படிக்க சென்ற சரவணன் மற்றும் சரத்பிரபு ஆகியோரின் மர்ம மரணங்கள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு படிக்க செல்லும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

இதற்காக அந்தந்த மாநிலங்களில் ஆலோசனை மையங்கள், உதவி மையங் களை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதில், முஸ்லிம் மாணவர் அமைப்பு, திராவிடர் விடுதலை கழகம், சமூகநீதி மாணவர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்பு களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்