கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதாவினர் தீப்பெட்டியுடனும், காங்கிரசார் பெட்ரோலுடனும் சுற்றுகிறர்கள்

கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதாவினர் தீப்பெட்டியுடனும், காங்கிரசார் பெட்ரோலுடனும் சுற்றுகிறார்கள் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2018-01-20 21:45 GMT
சிக்கமகளூரு,

கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதாவினர் தீப்பெட்டியுடனும், காங்கிரசார் பெட்ரோலுடனும் சுற்றுகிறார்கள் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா குற்றம்சாட்டி உள்ளார்.

தேவேகவுடா பேட்டி

சிக்கமகளூரு மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஹாசன் தொகுதி எம்.பி.யும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா கலந்துகொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

அரசியல் ஆதாயம்

சிக்கமகளூரு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டும். மேலும் டேங்கர்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். இதற்காக கூடுதல் நிதி ஒதுக்க கோரி முதல்-மந்திரி, கிராமப்புற வளர்ச்சித் திட்ட மந்திரி ஆகியோருக்கு கடிதம் எழுத உள்ளேன்.

மாவட்டத்தில் நடை பெறும் வளர்ச்சிப் பணிகளுக்காக கர்நாடக அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நெருங்குவதால் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் அரசியல் நாடகத்தை தொடங்கிவிட்டன. இந்த இரு கட்சிகளின் அரசியல் ஆதாயத்திற்காக ஏழை, எளிய மக்கள் கொலை செய்யப்படும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு தேசிய கட்சிகளான காங்கிரசும், பா.ஜனதாவும் தான் காரணம்.

ஆட்சியை கைப்பற்ற...

ராகுல் காந்தி, கர்நாடக தேர்தல் நெருங்குவதால் அரசியல் நாடகம் நடத்த தயாராகி வருகிறார். சாதி, மதத்தை வைத்து தான் பா.ஜனதாவும், காங்கிரசும் அரசியல் நடத்துகின்றன. ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகளை தடை செய்யக் கோரி முதல்-மந்திரி சித்தராமையா பிரதமருக்கு கடிதம் எழுதுவதாக கூறியுள்ளார். அதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். அப்போது தான் மத்திய அரசு அந்த அமைப்புகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்கும்.

கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று பா.ஜனதாவினர் தீப்பெட்டியுடனும், காங்கிரசார் பெட்ரோலுடனும் சுற்றுகிறார்கள். மக்கள் கவனமாக இருக்க வேண்டும். நான் எம்.எல்.ஏ., மந்திரி, முதல்-அமைச்சர், பிரதமர் ஆக பதவி வகித்துள்ளேன். அப்போது கீழ்தரமாக எந்த கட்சி தலைவர்களும் அரசியல் செய்யவில்லை. ஆனால் தற்போதைய அரசியல்வாதிகள் கீழ்தரமான அரசியல் செய்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்