கல்பாக்கம் அருகே பாதிரியார் மர்மச்சாவு தூக்கில் பிணமாக தொங்கினார்

கல்பாக்கம் அருகே பாதிரியார் ஒருவர் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். தூக்கில் தொங்கிய பிணத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Update: 2018-01-20 22:45 GMT
கல்பாக்கம்,

சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் கிதியோன் (வயது 44). திருமணம் ஆகவில்லை. பாதிரியாரான இவர், கல்பாக்கம் அடுத்த அடையாளசேரி பள்ளிக்கூட தெருவில் தேவாலயம் நடத்தி வந்தார். தேவாலய வளாகத்தில் உள்ள குடிசையில் அவர் தனியாக வசித்து வந்தார். நேற்று காலை 7 மணியளவில் தேவாலயத்தை சுத்தம் செய்வதற்காக பெண் ஊழியர் ஒருவர் வந்தார்.

அப்போது தேவாலய நுழைவு வாயில் கதவு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பாதிரியார் வீட்டின் கதவும் திறந்து இருந்தது. வீட்டிற்குள் பாதிரியார் கிதியோன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தூக்கில் பிணமாக தொங்கிய பாதிரியாரின் உடலில் சிறு காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ஊழியர் அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, அணைக் கட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதற்குள் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் அருகில் உள்ள கிழக்குகடற்கரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

உடனே சம்பவ இடத்திற்கு மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ்் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் அமல்ராஜ் (செய்யூர்) கண்ணையன்(கல்பாக்கம்) உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் பாதிரியாரின் உடலை மீட்ட போலீசார் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, பாதிரியார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையே செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பாதிரியாரின் உறவினர்கள் வந்தனர். அப்போது பாதிரியார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், மர்ம நபர்கள் அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு இருக்கலாம் என்றும் கூறி ஆஸ்பத்திரி அருகே உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது. 

மேலும் செய்திகள்