பஸ் கட்டண உயர்வை கண்டித்து நூதன போராட்டம் 22 பேர் கைது

திண்டுக்கல்லில், பஸ் கட்டண உயர்வை கண்டித்து நூதன போராட்டம் நடத்திய 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-01-20 23:00 GMT
திண்டுக்கல்,

பஸ் கட்டணத்தை திடீரென உயர்த்தி தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இதனை கண்டித்து, நேற்று திண்டுக்கல்லில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, மெங்கில்ஸ் சாலையில் இருந்து மூன்று சக்கர மோட்டார் சைக்கிளில் அமர்ந்து பஸ்நிலையத்துக்கு வந்தனர்.

அந்த மோட்டார்சைக்கிளை, வாலிபர் ஒருவர் கழுத்தில் கயிறை கட்டி இழுத்து வந்தார். பின்னர் பஸ்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலசந்திரபோஸ் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.

ஆனால், அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை தடுத்தனர். இதனால், திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு சிலுவத்தூர் சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் இரவு அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்