சேரன்மாதேவியில், 3 நாட்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டன; பதற்றம் தணிந்தது

சேரன்மாதேவியில் 3 நாட்களுக்கு பிறகு அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. பதற்றம் தணிந்ததால் இயல்பு நிலை திரும்பியது.

Update: 2018-01-20 20:45 GMT
சேரன்மாதேவி,

சேரன்மாதேவியில் 3 நாட்களுக்கு பிறகு அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. பதற்றம் தணிந்ததால் இயல்பு நிலை திரும்பியது. இருப்பினும் ஒரு தரப்பினர், பாதுகாப்பு கேட்டு உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கார் டிரைவர் கொலையால் பதற்றம்

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி வடக்கு 4-ம் தெருவை சேர்ந்தவர், கணேசன் மகன் தங்கப்பாண்டி(வயது 22). கார் டிரைவரான இவர், கடந்த 3 நாட்களுக்கு முன்பு மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், கடந்த ஆண்டு செல்லையா என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பழிக்குப்பழியாக தங்கப்பாண்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த தங்கப்பாண்டியின் உறவினர்கள் மற்றும் சிலர், இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வருபவர்களின் வீடுகளில் புகுந்து தாக்குதல் நடத்தினர். தங்கப்பாண்டியின் கொலையில் சம்பந்தப்பட்ட மர்ம நபர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் செய்தனர். அப்போது அங்கு வந்த வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் சேரன்மாதேவி பஸ்நிலையத்துக்குள் பஸ்கள் வராமல், மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இச்சம்பவத்தால் பதற்றம் உருவானதை தொடர்ந்து சேரன்மாதேவி பகுதியில் கடந்த 3 நாட்களாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

3 நாட்களுக்கு பிறகு கடைகள் திறப்பு

இந்த கொலை வழக்கு தொடர்பாக நம்பிராசன் உள்ளிட்ட 4 பேர் மீது சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் சேரன்மாதேவி கோட்டைவிளை தெருவை சேர்ந்த வேலு மகன் குமார்(23), நெல்லை மாவட்ட கோர்ட்டில் சரண் அடைந்தார்.

இதற்கிடையே நேற்று முன்தினம், தங்கப்பாண்டியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து 3 நாட்களுக்கு பின்னர் நேற்று பதற்றம் தணிந்தது. அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. இயல்பு நிலை திரும்பியது.

உதவி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

இந்தநிலையில் கோட்டைவிளை தெருவை சேர்ந்த ஒரு தரப்பினர், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி சேரன்மாதேவி உதவி கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக சென்றனர். அங்கு சென்ற அவர்கள், உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்