நெல்லை மாவட்டத்தில் மானிய விலையில் 4,456 பெண்களுக்கு இருசக்கர வாகனம் நாளை முதல் விண்ணப்பம் வினியோகம்

நெல்லை மாவட்டத்தில், அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் 4,456 வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்பட உள்ளது.

Update: 2018-01-20 21:00 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டத்தில், அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் 4,456 வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியான பெண்கள் நாளை(திங்கட்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்


நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாடு அரசு ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள உழைக்கும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகன திட்டம் என்ற புதிய திட்டத்தினை இந்த நிதி ஆண்டில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டதின் கீழ் நெல்லை மாவட்ட கிராம பகுதியில் 2 ஆயிரத்து 257 பெண்களுக்கும், நகர்புற பகுதியில் 2 ஆயிரத்து 199 பெண்களுக்கும் என மொத்தம் 4 ஆயிரத்து 456 பேருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படுகிறது.

தகுதிகள்

தமிழ்நாட்டை சார்ந்த 18 முதல் 40 வயது வரையுள்ள இருசக்கர வாகன உரிமம் பெற்றுள்ள வேலை செய்யும் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்து மிகாமல் இருக்க வேண்டும்.

மலைப்பகுதி, பெண்களை குடும்பத்தலைவராக கொண்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுதிறனாளி பெண்கள், திருமணமாகாத 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மற்றும் திருநங்கையினருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். அடுத்த மாதம் 5-ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க வேண்டும். பஞ்சாயத்து யூனியன்கள், நகரசபை அலுவலகம், மாநகராட்சி மற்றும் மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படும். விண்ணப்பங்களை இணையதளத்திலும் பதிவு இறக்கம் செய்யலாம்.

கடன் வசதி

இருசக்கர வாகனங்கள் வாங்க, வங்கி மூலம் கடன் பெறலாம். பிறந்த தேதிக்கான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், இருசக்கர ஓட்டுனர் உரிமம், வருமான சான்றிதழ் உள்ளிட்டவைகளை சமர்ப்பிக்க வேண்டும். அடுத்த மாதம் (பிப்ரவரி) 24-ந் தேதி மாநில அளவில் இந்த திட்டத்தை தமிழக அளவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே நமது மாவட்டத்தில் அமைச்சர் ராஐலெட்சுமி இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயண நாயர், மகளிர் திட்ட அலுவலர் கெட்ஸி லீமா அமலினி, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மாகின் அபுபக்கர், வட்டார போக்குவரத்து அலுவலர் சசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்