வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடுவது பிரச்சினைகளுக்கு தீர்வாகாது ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு

வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடுவது பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என கும்பகோணத்தில் நடந்த தொழிலாளர் நீதிமன்றம் தொடக்க விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி என்.சதீஷ்குமார் கூறினார்.

Update: 2018-01-20 22:30 GMT
கும்பகோணம்,

தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கான தொழிலாளர் நீதிமன்றம் கும்பகோணத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவில் மாவட்ட நீதிபதி நக்கீரன் வரவேற்றார். ஐகோர்ட்டு நீதிபதிகள் பாரதிதாசன், சுந்தர், சுப்பிரமணியன், பவானிசுப்ராயன், கூடுதல் தலைமை குற்றவியல் நீதிபதி தேன்மொழி, மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், கும்பகோணம் வக்கீல்கள் சங்க தலைவர் ராஜசேகர், செயலாளர் செந்தில்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.சதீஷ்குமார் கலந்து கொண்டு நீதிமன்ற கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் குத்துவிளக்கேற்றி நீதிமன்றத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கும்பகோணத்தில் உள்ள தொழிலாளர் நீதிமன்றம் உதவும். நீதிமன்றங்கள் என்பது வக்கீல்களுக்கு மட்டுமானது அல்ல. மக்களுக்கான அமைப்பாகும். வழக்கை எடுத்துவரும் பொதுமக்கள் வக்கீல்கள் கூறுவதை வேதவாக்காக நினைக்கிறார்கள். எனவே வக்கீல்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். வக்கீல் தொழில் சமுதாயத்தில் மதிக்கக்கூடிய இடத்தில் உள்ளது. இதை உணராத இளம் வக்கீல்கள், கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடுகிறார்கள். கோர்ட்டை புறக்கணிப்பது பிரச்சினைகளுக்கு தீர்வாகாது. இருசக்கர வாகனங்கள் காணாமல் போனால், வக்கீல்கள் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளிக்காமல், சாலைக்கு வந்து கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடுவது எந்த வகையில் நியாயம்?

இளம் வக்கீல்கள் மூத்த வக்கீல்களை குருவாக ஏற்று செயல்பட வேண்டும். அவர்களைப்போல் நீதிமன்றத்தில் பணியாற்ற வேண்டும். சட்டத்துறையில் முன்னேற ஆங்கில புலமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். சட்ட நுணுக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும். வக்கீல்கள் நீதிமன்றத்தை புறக்கணிப்பு செய்வது தேவையில்லாத ஒன்றாகும். இதை உணர்ந்து இளம் வக்கீல்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்