தாதா மர்டர் மணிகண்டனை கொலை செய்ய சதி? கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது பலத்த பாதுகாப்பு

பிரபல தாதா மர்டர் மணிகண்டனை கொலை செய்ய சதி நடந்ததாக தெரியவந்ததையொட்டி அவரை ஆஜர்படுத்தியபோது புதுவை கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Update: 2018-01-19 23:30 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய ஜெயில் உள்ளது. அங்கு 200க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். ஜெயிலில் உள்ள ரவுடிகள் சிலர் செல்போன் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வந்தன. இதனை தொடர்ந்து அதிகாரிகள் ஜெயிலில் சோதனை நடத்தி ரவுடிகளிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமை செயலாளர் அஸ்வனி குமார் காலாப்பட்டு மத்திய ஜெயிலில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்தநிலையில் தற்போது ஜெயிலில் உள்ள பிரபல தாதா மர்டர் மணிகண்டன் உள்பட ரவுடிகள் பலரை வெளியில் உள்ள ரவுடிகள் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணைக்காக ஜெயிலில் இருந்து கோர்ட்டுக்கு அழைத்து வரப்படும் கைதிகளுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மர்டர் மணிகண்டன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று தற்போது காலாப்பட்டு மத்திய ஜெயிலில் உள்ளார். இந்த நிலையில் மர்டர் மணிகண்டன் ஒரு கொலை வழக்கு விசாரணைக்காக புதுவை கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

மேலும் கோர்ட்டு வளாகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 30-க்கும் மேற்பட்ட போலீசார் சாதாரண உடையில் சுற்றி கண்காணித்து வந்தனர். சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையால் யாராவது வந்தால் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் நேற்று திடீர் பரபரப்பு காணப்பட்டது. 

மேலும் செய்திகள்