திருவள்ளூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2018-01-19 22:30 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து தலைமை தாங்கினார்.

மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை- பொறுப்பு) பிரதாபராவ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்ச்செல்வி, வேளாண்மை துணை இயக்குனர் ராகவேந்திரராவ் மற்றும் அனைத்துத்துறை அரசு அதிகாரிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில், திரளான விவசாயிகள் தங்களுக்கு பயிர்க்கடன் மற்றும் பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை எனக்கூறி திடீரென கோஷங்களை எழுப்பி அதிகாரிகளை முற்றுகையிட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது விவசாயிகள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை அவரிடம் மனுக்களாக அளித்தனர். அதை பெற்றுக்கொண்ட அவர் அந்த மனுக்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்