சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்ச புகார் குறித்து ஊழல் தடுப்பு படை விசாரணை

சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வெளியான புகார் குறித்து ஊழல் தடுப்பு படை விசாரணைக்கு உத்தரவிட கர்நாடக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2018-01-19 21:30 GMT
பெங்களூரு,

சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வெளியான புகார் குறித்து ஊழல் தடுப்பு படை விசாரணைக்கு உத்தரவிட கர்நாடக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரூ.2 கோடி லஞ்சம்


சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்காக சிறைத்துறை போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சிறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா, கடந்த ஆண்டு (2017) பரபரப்பு குற்றச்சாட்டு கூறி இருந்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை சத்திய நாராயணராவ் மறுத்து விட்டார். மேலும் அவர், ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா மீது கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை குழுவை கர்நாடக அரசு அமைத்திருந்தது. அந்த குழுவினர் பெங்களூரு சிறை முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்கள்.

சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள்

அந்த அறிக்கையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது உண்மை தான் என்றும், சிறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், கைதிகள் போதை பொருட்கள் பயன்படுத்துவதாகவும் விசாரணை குழுவினர் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா கூறிய குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் இல்லை என்று விசாரணை குழுவினர் தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியானது.

இதன் காரணமாக அந்த அறிக்கையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ஐ.பி.எஸ். அதிகாரி சத்திய நாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் புகார் குறித்து வினய்குமார் தலைமையிலான குழுவினர் எந்த விசாரணையும் நடத்தவில்லை என்றும், அதுகுறித்து லோக் அயுக்தா அல்லது ஊழல் தடுப்பு படை விசாரணைக்கு உத்தரவிடலாம் என்று பரிந்துரை செய்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. தற்போது அந்த அறிக்கை உள்துறையின் கூடுதல் தலைமை செயலாளரிடம் இருக்கிறது.

ஊழல் தடுப்பு படை விசாரணைக்கு...


இந்த நிலையில், சிறை முறைகேடுகள் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய் குமார் தலைமையிலான விசாரணை குழு அளித்த அறிக்கையின்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி தீர்மானித்திருப்பதாகவும், இதனால் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக ரூபா கூறிய குற்றச்சாட்டு குறித்து ஊழல் தடுப்பு படை அல்லது லோக் அயுக்தா போலீசார் விசாரணைக்கு உத்தரவிட கர்நாடக அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில் ஏற்கனவே ஊழல் தடுப்பு படையில் டி.ஐ.ஜி. ரூபா புகார் கொடுத்திருப்பதால் ஊழல் தடுப்பு படை போலீஸ் விசாரணைக்கு கூடிய விரைவில் மாநில அரசு உத்தரவிடலாம் என்று சொல்லப்படுகிறது. இதுபற்றி கர்நாடக அரசு அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

மேலும் செய்திகள்