ரேஷன் கடை ஊழியர் பணிகளுக்கு நேர்முகத்தேர்வு கலெக்டர் அலுவலகத்தில், 2-வது நாளாக நடந்தது

ரேஷன் கடை ஊழியர் பணிகளுக்கு நேர்முகத்தேர்வு நேற்று 2-வது நாளாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

Update: 2018-01-19 21:45 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்ட ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் விற்பனையாளர் பணியில் 90 இடங்களும், சாக்கு கட்டுவோர் (பேக்கர்ஸ்) பணியில் 6 இடங்களும் என மொத்தம் 96 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரம்புவதற்கான நேர்முகத்தேர்வு நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள இணைப்பு கட்டிடத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

கூட்டுறவுத்துறை மூலமாக இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள மொத்தம் 8,304 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களில் சுமார் 1,100 பேர் நேற்று முன்தினம் நடந்த நேர்முகத்தேர்வில் கலந்துகொள்வதற்காக அழைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நேற்று 2-வது நாளாக நடந்தது. நேற்றும் மொத்தம் 1,100 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர். முதலில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்தது. இதில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது சான்றிதழ்களை சரிபார்ப்பதற்காக சமர்ப்பித்தனர். அதன் பிறகு நேர்முகத்தேர்வு தொடங்கியது.

ரேஷன் பொருட்கள் விற்பனையாளர் பணிக்கு பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே போதும். ஆனால் பட்டப்படிப்பு படித்தவர்களும், என்ஜினீயர்களும் இந்த நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டனர். கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமானோர் திரண்டதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

நேர்முகத்தேர்வு தொடர்ந்து வருகிற 25-ந் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) நடைபெறுகிறது. இதில் தேர்வு செய்யப்படுபவர்களின் விவரம் 25-ந் தேதிக்கு பிறகு தெரிவிக்கப்பட உள்ளது. 

மேலும் செய்திகள்