கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் தடாக பிரதிஷ்டை விழா

கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் தடாக பிரதிஷ்டை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2018-01-19 21:00 GMT
பாவூர்சத்திரம்,

கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் தடாக பிரதிஷ்டை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

நரசிம்மர் கோவில்

பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூரில் 16 திருக்கரங்களுடன் கூடிய நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் முன்புறம் நரசிம்மரின் உக்கிரத்தை தணிக்கும் விதமாக தெப்பக்குளம் அமைந்துள்ளது. இந்த தெப்பக்குளம் பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்பட்டது.

பிரதிஷ்டை விழா

தற்போது இந்த தெப்பக்குளம் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. அதனை புனித படுத்தும் பூஜையாக, நரசிம்ம புஷ்கரணிக்கு தடாக பிரதிஷ்டை விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை 5.30 மணி முதல் நித்யலாராதனம், புண்யாக வாசனம், அங்குரார்ப்பணம், பிரதீசர ஆராதனம், அக்னி பிரதிஷ்டை, வாஸ்து ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்டவை நடைபெற்றது.

சிறப்பு பூஜைகள்

தொடர்ந்து நேற்று காலை 630 மணி முதல் பிரதான உக்த ஹோமங்கள், வேதபாராயணம், பூர்ணாகுதி, தீபாராதனை, நரசிம்ம புஷ்கரணிக்கு எல்லா விதமான அபிஷேகங்கள், கும்ப தீர்த்தத்தை குளத்தினுள் சேர்த்தல், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 10.05 மணி முதல் 10.25 மணிக்குள் குளத்தில் இருந்து தீர்த்தம் எடுத்தல், கும்ப ஜெபம், கும்பம் எழுந்திருத்தல், தொடர்ந்து வேங்கடாசலபதி மற்றும் நரசிம்மருக்கு தீர்த்தம் சமர்ப்பித்தல், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் தீர்த்த வலம் வந்து பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் விழாவில் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி., கலந்து கொண்டார். ஏற்பாடுகளை இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் சாத்தையா, தக்கார் சங்கர், தென்காசி தெற்கு ஆய்வாளர் கணேஷ் வைத்திலிங்கம், நரசிம்ம சுவாமி கைங்கர்ய சுவாமி கைங்கர்ய சபா நிறுவனர் சீனிவாச வெங்கடாசலம் உள்பட பலர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்