நிதிநிறுவன அதிபர் கொலையில் சரண் அடைந்த 2 பேரிடம் விசாரணை முடிந்தது மீண்டும் ஜெயிலில் அடைப்பு

காட்பாடியில் நடந்த நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் சரண் அடைந்த 2 பேர் விசாரணைக்கு பின்னர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

Update: 2018-01-19 21:30 GMT
வேலூர்,

காட்பாடி தாலுகா பழைய காட்பாடியை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 58). இவர், காட்பாடியில் நிதிநிறுவனம் நடத்தி வந்தார். கடந்த 10–ந் தேதி இரவு காட்பாடி தாராபடவேடு மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே ஸ்டாலின் நடந்து சென்றார். அப்போது அவரை, மர்ம நபர்கள் கத்தி மற்றும் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் 12–ந் தேதி வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு (எண்–3) கோர்ட்டில் காட்பாடி தாராபடவேடு காந்தி தெருவை சேர்ந்த முரளி மகன் முருகன் (24), கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த வடிவேல் மகன் தேவராஜ் (21) ஆகிய இருவரும் சரண் அடைந்தனர். இருவரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக ரகீம், ஓம் பிரகாஷ் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே கோர்ட்டில் சரணடைந்தவர்களை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி காட்பாடி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தார்.

அதன்படி, 2 நாட்கள் காவல் முடிந்து 2 பேரையும் போலீசார் மீண்டும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் இருவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

காவல் விசாரணை குறித்து போலீசார் கூறுகையில், கைது செய்த 6 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கோவில் பாதை தொடர்பாக கொலை செய்தோம் என்றனர். காவலில் எடுக்கப்பட்ட 2 பேரும் அதே காரணத்தையே தெரிவித்துள்ளனர் என்றனர்.

மேலும் செய்திகள்